மாமன்னன் ராஜராஜனின் குரு கருவூர் சித்தர் சந்நிதிக்கு வரும் இளையராஜா!
சென்னை: ராஜராஜ சோழனின் போர்வாள் எனும் படத்துக்கு மக்கள் முன் இசையமைக்கப் போகிறார் இளையராஜா என்று முன்பே கூறியிருந்தோம். அவர் அப்படி இசையமைக்கப் போகிற இடம் ரொம்ப சுவாரஸ்யமானது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் குரு எனப்படும் கருவூர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில்தான் இளையராஜா மக்கள் முன் மெட்டமைக்கிறார்.

கரூவூர் சித்தர்
இந்த இடம் கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. கருவூர் சித்தரின் ஜீவசமாதி உள்ள இடத்தில் இசைஞானி இசையமைப்பதைக் காண பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடம் ஏன்?
இளையராஜா இந்த இடத்தைத் தேர்வு செய்தது ஏன் தெரியுமா? சோழ மன்னர்களில் தலை சிறந்தவரான ராஜராஜ சோழனுக்கு குருவாகத் திகழ்ந்தவர் கருவூர் சித்தர்தான். அதுமட்டுமல்ல, இந்த சித்தருக்காக சிவபெருமானே தலைசாய்ந்து தோள் கொடுத்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன.
எனவே அந்த குருவின் ஆசியோடு இந்த இடத்தில் இசையமைத்து படத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என இசைஞானி சொன்னதை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்களாம்.

37 ஆண்டு அனுபவத்தில்...
இசைஞானி இளையராஜாவின் 37 ஆண்டு இசை வாழ்க்கையில், பல முறை கச்சேரிகளில் நினைத்த மாத்திரத்தில் மெட்டுப் போட்டு பிரமிக்க வைத்திருக்கிறார். ஆனால் மக்கள் முன் ஒரு படத்துக்கு புதிய மெட்டமைப்பது இதுவே முதல் முறை. சொல்லப் போனால் இசைஞானிக்கே இது ஒரு புது அனுபவம் என்கிறார்கள் படக்குழுவினர்.

சினேகா - ஸ்ரேயா
இந்தப் படத்தில் ஹீரோ சினேகன். ஹீரோயின்களாக சிநேகாவிம், ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள் என இப்போது அறிவித்துள்ளனர். தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ராஜராஜ சோழனாக இந்தி நடிகர்
மாமன்னன் ராஜராஜ சோழன் வேடத்தை ஏற்கப் போகிறவர் பிரபலமான இந்தி நடிகர் ஒருவர் என்கிறார்கள். அவர் யார் என்பதை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











