ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... முன்னணிக்கு வந்த பின்னணி இசை!
ஒரு படத்தின் பாடல்கள் பேசப்பட்டது போய், படத்தின் பின்னணி இசையைப் பேச வைத்த பெருமை, இந்திய சினிமாவில் இசைஞானி இளையராஜாவுக்குத்தான் உண்டு.
ஏன் பின்னணி இசைக்காக தேசிய விருது வாங்கியவர் இளையராஜா.

38 ஆண்டுகளாக...
இன்று நேற்றல்ல... 38 ஆண்டுகளுக்கு முன் தனது ஆரம்பப் படங்களிலேயே படங்களை இசையால் நிறைத்தவர் இளையராஜா. உல்லாசப் பறவைகள், ஜானி, தூறல் நின்னுபோச்சு, பாரதிராஜாவின் அத்தனைப் படங்களும், மகேந்திரனின் படைப்புகள், பாலுமகேந்திராவின் படங்கள் போன்றவற்றை இசையில் இழைத்துக் கொடுத்தவர்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
பாடல்களே இல்லாமல், கமல் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்துக்கு பின்னணி இசை மூலம் புதிய பரிமாணம் தந்திருப்பார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
இப்போது மீண்டும் ஒரு படம், பாடல்களே இல்லாமல், ஆனால் ராஜாவின் பின்னணி இசையோடு வந்து பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறது.
அது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். மிஷ்கின் இயக்கிய இந்தப் படம்தான் இன்று சினிமா விரும்பிகளின் விருப்பப் படம். இந்தப் படத்துக்கு காட்சி நன்றாக உள்ளதா.. ராஜாவின் இசை சிறப்பாக உள்ளதா என்றெல்லாம் பிரித்துப் பேச முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளன இசையும் காட்சிகளும்.

ராஜாவுக்கு கவுரவம்
படத்தின் விளம்பரங்கள் வெளியானபோதே, முன்னணி இசை - இளையராஜா என்று அறிவித்த மிஷ்கின், தன் பெயரைக் கூட ராஜாவுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு, அவரை கவுரவித்தார்.
அப்படி ஒரு கவுரவம் பெறும் தகுதி தனக்கு உண்டு என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார் இளையராஜா. விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அத்தனை பேரும் ஒருமித்து, உணர்ந்து பாராட்டுகின்றனர் ராஜாவின் இசையை.

முன்னணி இயக்குநர் பாராட்டு
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த ஒரு முன்னணி இயக்குநர் (அவ்வப்போது ராஜாவுடன் உரசிக் கொண்டாலும்...), "அதான் இளையராஜா... இந்தப் படத்தில் மிஷ்கின் திரைக்கதைக்கு நிகரான இன்னொரு திரைக்கதையை தன் இசையால் நெய்திருக்கிறார் இளையராஜா... ஹேட்ஸ் ஆஃப்", என்றாராம்.


Click it and Unblock the Notifications











