பிக்பாஸ் வீட்டிற்குள் அலறியடித்த ஜிபி முத்து.. வச்சு செய்யும் சக போட்டியாளர்கள்!
சென்னை : பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் 100 நாட்கள் பயணம் துவங்கியுள்ளது. அவர்களுடன் இணைந்து பயணிக்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சிறப்பான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களும் ஆங்கர் கமலால் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்து 6வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே ஆட்டம், பாட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

பிரம்மாண்டமான துவக்கம்
நேற்றைய தினமும் பிரம்மாண்டமான துவக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கிய நிலையில், நடிகர் கமல்ஹாசன் 20 போட்டியாளர்களையும் சிறப்பான முறையில் வரவேற்று அவர்களை ரசிகர்களுக்கு வீடியோவுடன் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவர்களின் விருப்பங்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.

நடனத்தை அரங்கேற்றிய போட்டியாளர்கள்
ரச்சிதா, சாந்தி அரவிந்த் உள்ளிட்டவர்கள் நடனத்துடன் நேற்றைய துவக்கவிழா நிகழ்ச்சி களைகட்டியது. சாந்தி, கமலை குருவாக பாவித்து அவருக்கு குரு வணக்கம் செலுத்திவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். தொடர்ந்து இன்றைய தினம் உற்சாகமான நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து வீக்லி டாஸ்க் உள்ளிட்டவையும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் போட்டியாளர் ஜிபி முத்து
இதனிடையே நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜிபி முத்துவை வைத்து சக போட்டியாளர்கள் காமெடி செய்த சம்பவமும் நடைபெற்றது. இன்றைய தினம் அவர் தூங்கி எழுவதற்கு முன்னமே இந்த கலாட்டாவை சக போட்டியாளர் ராபர்ட் துவக்கி வைத்தார்.

ஜிபி முத்துவை கலாய்த்த ராபர்ட்
ஜிபி முத்து நன்றாக இழுத்து போத்தியபடி தூங்கிக் கொண்டிருக்க, ராபர்ட் அவரது காலை போய் ரகசியமாக பிராண்டி விட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். இதை சக போட்டியாளர்கள் பார்த்து சிரித்தபடி ரசித்து கொண்டிருக்கின்றனர். இதையடுத்து தன்னுடைய படுக்கையில் இருந்து அலறியடித்தபடி ஜிபி முத்து கீழே விழுகிறார். அவருக்கு என்ன நடந்தது என்பது புரியவே சிறிது நேரம் பிடிக்கிறது.

சமாதானம் செய்த போட்டியாளர்கள்
இதையடுத்து மற்ற போட்டியாளர்கள் அவரை தூக்கிவிட்டு கட்டியணைத்தபடி சமாதானம் செய்கின்றனர். சமூக வலைதளங்கள்மூலம் அனைவரையும் கவர்ந்த ஜிபி முத்துவையே பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் கலாய்த்த இந்த நிகழ்வு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











