Leo movie: இந்த முறையும் ரொமான்சில் கோட்டை விட்ட லோகேஷ்.. விஜய் -த்ரிஷா இருந்துமா?
சென்னை: நடிகர்கள் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.
படத்தில் விஜய்யுடன் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இன்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

லியோ படத்திலும் ரொமான்ஸ் காட்சிகளை கோட்டைவிட்ட லோகேஷ்: நடிகர்கள் விஜய் -த்ரிஷா இணையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் வெளியாகியுள்ளது லியோ படம். முன்னதாக கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் த்ரிஷா. இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு பெற்றோராக விஜய் -த்ரிஷா நடித்துள்ளனர். ஆக்ஷன் என்டர்டெயினராக லியோ படம் உருவாகியுள்ளது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகமாக கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், லியோ படத்திற்கான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. கடந்த சில வாரங்களாகவே லியோ படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வந்தனர். வெளிநாடுகளிலும் படத்தின் ப்ரீ புக்கிங் மிகப்பெரிய அளவில் களைகட்டியது. கடந்த சில தினங்களாக இந்திய அளவிலும் ப்ரீ புக்கிங் மிகப்பெரிய அளவில் இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதியில் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளதாகவும் இரண்டாவது பாதி சராசரிக்கும் மேலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முதல் பாதியில் கிராமத்தினர் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஹைனாவிடம் இருந்து விஜய் காப்பதாக காணப்படும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாகியுள்ள நிலையில் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் இல்லை என்பதே ரசிகர்களின் குறையாக காணப்படுகிறது. இதுபோன்ற ஒரு அதரடி ஆக்ஷன் படத்தில் அவற்றை இணைப்பது படத்தின் ஓட்டத்தை தடை செய்யலாம் என்று லோகேஷ் நினைத்திருக்கலாம்.
முன்னதாக லோகேஷின் கைதி, விக்ரம் படங்களிலும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து ரொமான்சோ காமெடியோ அதிகமாக இடம்பெறவில்லை. மாறாக ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளே அதிகமாக காணப்பட்டன. அந்த வகையில் லியோ படத்தையும் ரசிகர்கள் சேர்த்து வருகின்றனர். முந்தைய படங்களில் பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்தப் படம் அவற்றிலிருந்து மாறுபடும் என்று முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்தப் படத்திலும் ரொமான்ஸ் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மாறாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷா கேரக்டரும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்பதே ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. இரண்டாவது பாதியில் படத்தின் காட்சிகள் மிகவும் அழுத்தமாக காணப்படுவதாகவும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 1000 கோடிகளை அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











