திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்று படம்.. திருவிளையாடல் தருமியாக கொட்டாச்சி!
சென்னை: உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் திருவிளையாடல் படத்தில் வரும் தருமியாக நகைச்சுவை நடிகர் நடித்துள்ளார். அவரின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகர் விவேக் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கொட்டாச்சி. இவர் நடித்த பல்வேறு திரைப்பட காமெடிகள் சூப்பர் ஹிட்டாகின. இன்றளவும் மக்கள் மறக்காத அளவுக்கு காமெடி காட்சிகளில் நடித்திருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார். சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த இவர் உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருவிளையாடல் தருமி: அதாவது நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளியான பக்தி திரைப்படம் தான் திருவிளையாடல். இந்த படத்தில் தருமியாக நாகேஷ் நடித்திருப்பார். குறிப்பாக, சிவாஜி நாகேஷிடம் கேள்வி கேட்கும் காட்சியில், உணர்ச்சி பாவங்களை அந்தக் காட்சியில் தன் முகத்திலும் உடல் அசைவிலும் காட்டி. அந்தக் காட்சியில் நம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து திக்குமுக்காட வைத்திருப்பார்.
கடவுளுக்கு நன்றி: இந்த வேடத்தில் தான் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி திருவள்ளுவர் வரலாற்று படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், நான் வணங்கும் நாகேஷ் சார் தோற்றத்தில் நடித்ததில் பெருமை, நீண்ட நாள் கனவு நிறைவேறியது கடவுளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் பலர் கொட்டாச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் காமராஜர் வாழ்க்கை வரலாற்று படத்தை காமராஜ் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டது. செம்பூர் கே.ஜெயராஜ் தான் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். இப்படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். திருவள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, நக்கீரனாக சுப்பிரமணிய சிவா, பாண்டிய மன்னனாக O.A.K.சுந்தர் ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
கொட்டாச்சியின் மகள்: இவரின் மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமானார். இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பதை அறிந்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். மானஸ்வி இமைக்கா நொடிகள் படம் மட்டுமல்லாமல் தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











