2023ல் தமிழ் திரையுலகை உலுக்கிய மரணங்கள்.. முழு விவரம் உள்ளே
சென்னை: Tamil Celebrities Deaths in 2023 (2023ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபலங்களின் மரணங்கள்) 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளிய மரணங்களை காணலாம்.
கோலிவுட்டுக்கு 2023ஆம் ஆண்டு நல்ல வருடமாகவே அமைந்திருந்தது. ஜெயிலர், லியோ என பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடங்கி சித்தா, டாடா என சின்ன ஹீரோக்கள்வரை நடித்த படங்கள் ஹிட்டாகின.

இதனால் வியாபாரமும் நல்ல விதமாகவே அமைந்தது. ஆனால் சில மரணங்கள் தமிழ் சினிமாவை உச்சக்கட்ட சோகத்துக்கு தள்ளின. அதுகுறித்து பார்க்கலாம்.
மயில்சாமி மரணம்: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் பலருக்கு உதவிகளை செய்திருக்கிறார். அதனாலேயே அவர் மீது ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை மரியாதை வைத்திருந்தார். கடந்த சிவராத்திரிக்கு இரவு முழுவதும் விழித்திருந்த அவர் காலை வீட்டுக்கு வந்து நெஞ்சு வலிப்பதாக சொல்லியிருக்கிறார். மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மரணம் பலரையும் சோகத்தில் தள்ளியது.
மனோபாலா மரணம்: மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். ஏகப்பட்ட படங்களை இயக்கியவர் பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். யாரிடமும் ஈகோ பார்க்காமல் பழகும் தன்மையுடைய மனோபாலாவுக்கு கல்லீரல் பிரச்னை இருந்திருக்கிறது. அதற்காக சில வருடங்களாகவே அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாரிமுத்து மரணம்: கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கி பல படங்களில் நடித்தவர் மாரிமுத்து. சினிமாவில் எப்படி பிரபலமாக இருந்தாரோ அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அசால்ட்டான உடல் மொழியும், இந்தா ம்மா ஏய் என்ற வசனத்தின் மூலம் வெகு பிரபலமடைந்தார். வளசரவாக்கத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோ ஒன்றில் எதிர்நீச்சலுக்கு டப்பிங் கொடுத்தபோது நெஞ்சு வலிப்பது போல் உணர்ந்த அவர் அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். எந்த சீரியலால் பிரபலமடைந்தார் அந்த சீரியலுக்கான வேலையில் இருக்கும்போதே நிகழ்ந்த மாரிமுத்துவின் மரணம் ஒரு மாபெரும் இழப்பு.
விஜய் ஆண்டனி மகள் மீரா: மரணங்கள் என்றாலே சோகத்தை கொடுக்கக்கூடியவைதான். அதிலும் சிறு வயது மரணம் என்றால் சொல்வதற்கு வார்த்தை இல்லை. அப்படித்தான் விஜய் ஆண்டனி மகள் மீராவின் தற்கொலையும். படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய மற்றவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ளக்கூடிய மீரா என்ன காரணத்தாலோ தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவருக்கு வயது 17தான் ஆகிறது. மீராவின் அந்த மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியது. ஒவ்வொருவரும் தன்னுடைய மகள் இறந்து போனால் எப்படி சோகமடைவார்களோ அதேபோல் இருந்தார்கள். மீராவின் மரணம் விஜய் ஆண்டனியையும் அவரது மனைவி ஃபாத்திமாவையும் மொத்தமாக உடைத்திருக்கிறது. அவர்கள் மீண்டு வர இயற்கையும், காலமும் துணை நிற்கட்டும். இவர்கள் தவிர்த்து பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் படத்தில் நடித்த பாபுவின் மரணமும் திரையுலகை சோகத்தில் தள்ளியது.


Click it and Unblock the Notifications











