பிரபல தயாரிப்பாளரால் வந்த சிக்கல்... மோகன்லாலிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை... இதுதான் காரணமா?
கொச்சி: மலையாள முன்னணி நடிகரான மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லால் தயாரிப்பாளார் ஆண்டனி பெரும்பாவூர் உடன் இணைந்து திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த டிசம்பரில் ஆண்டனி பெரும்பாவூர் வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அப்போது ஆண்டனி பெரும்பாவூரிடம் கைப்பற்ற ஆவணங்கள் குறித்து மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னணி தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்
மலையாள திரையுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ஆண்டனி பெரும்பாவூர். நடிகர் மோகன்லாலிடம் கார் டிரைவராக வேலை பார்த்த ஆண்டனி, பின்னர் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தயாரிப்பில் வெளியான புலிமுருகன், லூசிபர், த்ரிஷ்யம், ப்ரோ டேடி, ஆராட்டு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கேரள திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த டிசம்பர் 15ம் தேதி நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

மோகன்லாலிடம் பலமணி நேரம் விசாரணை
இதனையடுத்து தற்போது மோகன்லாலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆண்டனியும் மோகன்லாலும் இணைந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே ஆண்டனியிடம் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து, நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். கொச்சியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் மோகன்லாலிடம் விசாரணை செய்தனர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த விசாரணை குறித்து அதிகாரிகள் எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

மோகன்லாலுக்கு தொடரும் சோதனை
முன்னதாக 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐடி ரெய்டின் போது, மோகன்லால் வீட்டில் 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மோகன்லால் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள், இறந்த யானையின் உடையது தான் கேரள அரசு தெரிவித்திருந்தது. இதனால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் உள்ள தன் மீதான யானை தந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனு தொடுத்தார்.

மெளனம் காக்கும் மோகன்லால்
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், மோகன்லால் பிரபல நடிகராக இல்லையென்றால் இந்நேரம் சிறை சென்றிருக்கக் கூடும் என பகிரங்கமாக கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மோகன்லாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையும் அவருக்கு பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் இன்று நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து மோகன்லால் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











