நடிகர் விஜயின் வீடுகளிலும் வருமான வரித்துறை ரெய்டு.. பரபரக்கும் கோலிவுட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் புரடெக்ஷன் மற்றும் அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் கடைசியாக ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸானது.

முக்கிய ஆவணங்கள்
படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து லாபம் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து நஷ்டம் என்றும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் பிகில் படம் தொடர்பாக சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

சென்னை வருகை
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக நெய்வேலி என்எல்சி சுரங்கப்பகுதியில் நடைபெற்ற மாஸ்டர் பட ஷுட்டிங்கில் பங்கேற்றிருந்த விஜயிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜயை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகின்றனர் அதிகாரிகள்.

வீடுகளிலும் ரெய்டு
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் மற்றொரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகார்
இதேபோல் நடிகர் விஜய்க்கு சொந்தமான சென்னை கானாத்தூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் மற்றும் வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு அவரை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

கானாத்தூரில் விசாரணை
இந்நிலையில் அவரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சென்னைக்கு வந்ததும் கானாத்தூரில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications