I'Day Release Movies List: தங்கலான் முதல் ரகு தாத்தா வரை.. ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட் இதோ
சென்னை: விழாக்காலமோ அல்லது விடுமுறை தினங்களோ வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வந்து விட்டால், சினிமா உலகினர் போட்டி போட்டுக்கொண்டு படத்தினை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படித்தான் அடுத்த வாரம் வியாழக்கிழமை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் தமிழ் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் பல படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், தமிழ் மற்றும் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகவுள்ள படங்கள் குறித்து காணலாம்.
1. தங்கலான்: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் உடன், பார்வதி திருவேத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டு வருகின்றது. ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது தங்கலானைக் குறிப்பிடலாம்.

2.டிமான்டி காலணி 2: அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பிடிஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது. இயக்குநர் அஜய் ஞானமுத்து 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படம் மிகவும் எளிமையான ஒரு படமாக திரில்லர் ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
3. ரகு தாத்தா: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியானபோதே படம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. கர்நாடக சினிமா உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமும் சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது.
4. வேதா: நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேதா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜான் ஆபிரகாம், ஷர்வாரி, அபிஷேக் பானர்ஜு மற்றும் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
5. கேல் கேல் மெய்ன்: முதாசர் அஜீஸ் தற்போது இயக்கியுள்ள படம் 'கேல் கேல் மெய்ன்'. இந்த படத்தில் அக்சய் குமார், வாணி கபூர், பர்தீன் கான், டாப்ஸி பன்னு, அபர்சக்தி குரானா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.
6. ஸ்ட்ரீ 2: ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்ட்ரீ 2. இந்த படமும் சுதந்திர தினத்தில் வெளியாகின்றது.


Click it and Unblock the Notifications











