இந்தியா இந்தி நாடு கிடையாது.. ஆஸ்கர் வென்ற ’நாட்டு நாட்டு’.. நெத்தியடி ட்வீட் போட்ட பிரபல நடிகை!
பெங்களூரு: சிம்புவின் குத்து, தனுஷின் பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை திவ்யா என்கிற ரம்யா ஆஸ்கர் வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நடிகை திவ்யா இந்தியா ஒன்றும் இந்தி நாடு கிடையாது என்றும் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு ஆர்ஆர்ஆர் படத்தை சுற்றி ஏகப்பட்ட அரசியல் சர்ச்சைகளும் ஆரம்பித்துள்ளது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்கிற கருத்துக்களும் கிளம்பி உள்ளன.

ஆர்ஆர்ஆர் டீமுக்கு குவியும் பாராட்டு
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைத்து இருந்தார். 1100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த அந்த படம் ஆஸ்கர் மேடையிலும் கம்பீரமாக கெத்துக் காட்டிய நிலையில், ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை திவ்யா பாராட்டு
குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல்வேறு கன்னட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமான நடிகை ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை உருவாக்கிய அனைவரையும் வெகுவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.

இந்தியா ஒன்றும் இந்தி நாடு கிடையாது
இந்தியா என்றாலே வெளிநாட்டினரின் கண்களுக்கு இந்தி நாடாகவே தெரியப்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தெலுங்கு பாடலான நாட்டு நாட்டு பாடலின் வெற்றி தென்னிந்தியாவை உலகறிய செய்துள்ளது என்றும் இந்தியா வெறுமனே இந்தி நாடு என்கிற மாயை உடைத்தெறிக்கப்பட்டுள்ளது என்றும் நச்சென கூறியுள்ளார்.

பாலிவுட் மட்டுமல்ல
இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான் என்கிற நினைப்பும் தற்போது உடைந்துள்ளது எனக் கூறிய திவ்யா இந்தியா வெறும் பாலிவுட் மட்டும் கிடையாது என்றும் இந்தி திணிப்புக்கு எதிரான சாட்டையை சுழற்றி உள்ளார். தெலுங்கு திரைப்படம் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், கன்னட திரைப்படங்களான கேஜிஎஃப் 2, காந்தாரா உள்ளிட்ட படங்களும் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளன.
ஆட்டோ டிரைவர் வீடியோ
பெங்களூருவில் ஆட்டோ டிரைவரை வடமாநில பயணி ஒருவர் இந்தியில் பேசு, எனக் கூற நான் ஏன் இந்தியில் பேசணும் என எதிர்ப்பு குரல் கொடுத்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த வீடியோவை ஷேர் செய்து நாட்டு நாட்டு பாடலுக்கு வாழ்த்து சொன்னது மட்டுமின்றி பாஜகவினரின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா ட்வீட் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஆஸ்கர் அரசியல்
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், அதனை வைத்து ஏகப்பட்ட அரசியல் பிரச்சனைகள் கிளம்பி வருவது சினிமாவுக்கான ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











