தப்பான படங்களையே இந்தியா ஆஸ்கருக்கு அனுப்புது.. ஏ.ஆர். ரஹ்மான் என்ன சொல்ல வராரு?
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் நிகழ்ச்சிக்கு முன்னதாக இசை துறையை சார்ந்த லெஜண்ட் எல் சுப்பிரமணியத்துடன் கலந்துரையாடிய போது இந்தியா அதிகளவில் தவறான படங்களையே ஆஸ்கருக்கு அனுப்பி வருகிறது என குற்றம்சாட்டியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்தியா சார்பில் ஆண்டு தோறும் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்கள் நாமினேஷன் கூட ஆகாமல் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு விஷயத்தை ஓபனாக பேசியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் எப்போதுமே சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாதவாறே தனது பேச்சுக்களை யார் மனதையும் புண்படுத்தாத வகையில் ரொம்பவே ஹம்பலா பேசிட்டு போயிடுவார். ஆனால், சில சமயங்களில் நறுக்கென சில சர்ச்சையை கிளப்பும் விஷயங்களை ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொல்வதை போல பேசி பரபரப்பை கிளப்புவதிலும் கில்லாடி தான். தமிழ் மொழி தான் சிறந்த மொழி என்றும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் சூடான கருத்துக்களை முன் வைத்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஆஸ்கர் வென்ற இந்தியா
இதுவரை ஆஸ்கர் நாமினேஷனுக்கு மட்டுமே சில முறை சென்ற நிலையில், இந்த முறை நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ஆதரவின்றி தவித்த இரு குட்டி யானைகளை குழந்தை போல வளர்த்த முதுமலை தம்பதியினரின் ஆவண குறும்படமான தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படமும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

தி செல்லோ ஷோ
ஆனால், இந்தியா சார்பில் இந்த ஆண்டு தி செல்லோ ஷோ எனும் குஜராத்தி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டது. நாமினேஷனில் கூட அந்த படம் இடம்பெறாமல் தோல்வியை தழுவியது. தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தான் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் வென்றன.

தவறான படங்கள்
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் பெரும்பாலும் தவறான படங்களாக இருப்பதாலே ஆஸ்கர் விருது விழாவில் அவை தேர்வாகி வெற்றி பெறுவதில்லை என தனது கருத்தை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இந்தியா அப்படி செய்வதால் தான் இன்னமும் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவுக்கான ஆஸ்கர் வெல்லவில்லை என்றும் கூறி இருக்கிறார் இசைப்புயல்.

வெஸ்டர்ன் சிந்தனை
மேற்கத்திய சிந்தனைகள் இருக்கும் படத்தையே தொடர்ந்து இந்தியா பல முறை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைப்பதாகவும், நம் சொந்த மண்ணின் அடையாளம் கொண்ட படங்களை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் பட்சத்தில் சிறந்த படம் நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும் எனக் கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

நாட்டு நாட்டுக்கு எப்படி கிடைத்தது
நாட்டு நாட்டு பாடல் இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக கொண்டு இந்திய மண்ணின் சிறப்புகளை கொண்டிருந்த நிலையிலும், தெலுங்கு திரையுலகத்திற்கான இசையை அடிப்படையாக கொண்டு அந்த பாடலை கீரவாணி இசையமைத்த நிலையில் தான் அந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்கின்றனர்.

யானை படத்துக்கு
அதே போல மனிதம் மிளிரும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைக்க அந்த நேட்டிவிட்டி டச் தான் காரணம் என்கின்றனர். ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இந்த விஷயத்தை கட்டாயம் கடைபிடிப்பதால் இந்தியா அடுத்த முறை ஆஸ்கர் விருதுக்கு மண் சார்ந்த தனித்துவமான படைப்புகளை தேர்வு செய்து அனுப்பலாம் என ஏ.ஆர். ரஹ்மான் அந்த பேட்டியில் பரிந்துரைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











