Miss World 2023 - உலக அழகி போட்டி 2023 - 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில்!
டெல்லி: Miss World 2023 (உலக அழகி போட்டி 2023) உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக அளவில் பிரபலமான போட்டிகளில் ஒன்று உலக அழகி போட்டி. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. சுமார் 130 நாடுகளின் அழகிகள் இதில் கலந்துகொண்டு போட்டியிடவிருக்கின்றனர். பல சுற்றுகள் நடக்கும் இப்போட்டியானது இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கவிருக்கின்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இப்போட்டி நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பு: இந்தியாவில் நடக்கவிருக்கும் இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக, உலக அழகியான கரோலினா பைலாவ்ஸ்கா, மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி, இந்தியாவின் சார்பில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் உள்ளிட்டோர் புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உலக அழகி கரோலினா, இந்த 71 வது உலக அழகிப் போட்டியை இந்திய அரசு நடத்த ஒத்துக் கொண்டது இந்தியா அழகு மற்றும் முற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் நடப்பது சிறப்பு வாய்ந்த ஒன்று: பெண்ணின் ஆற்றலையும் தனித்துவத்தையும் கொண்டாடும் இந்த உலக அழகி போட்டியை இந்தியாவுடன் இணைந்து மிஸ்வேர்ல்டு நிறுவனம் நடத்துவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜூலியா மோர்லி பேச்சு: மோர்லி பேசுகையில், "71ஆவது உலக அழகி போட்டியை இந்தியாவில் நடத்துவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கு நான் வந்த முதல் நாளில் இருந்தே இந்நாடு மீது எனக்கு பாசம் இருக்கிறது. இதன் தனித்தன்மை, பன்முகத்தன்மை வியப்பு கொடுக்கக்கூடியது. அழகான இடங்கள், இந்தியாவின் கலாசாரம் எப்போதும் எனக்கு வியப்புதான்.

உதவியவர்களுக்கு நன்றி: இந்தப் போட்டியை "மிஸ் வேர்ல்ட் லிமிடெட் மற்றும் பிஎம்ஐ என்டர்டெயின்மென்ட் இணைந்து நடத்துகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக 'Incredible India' என்கிற பெயரில் ஒரு மாதம் கிட்டதட்ட 130 நாடுகளின் சாதனைப் பெண்மணிகளின் திறமையைப் பரப்புரை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு எங்களுக்குப் போதிய அளவு ஆதரவைக் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி" என்றார்.
இந்தியாவிலிருந்து உலக அழகிகள்: இந்தியாவிலிருந்து இதுவரை ரெய்டா ஃபாரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டையானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), ப்ரியங்கா சோப்ரா (2000), மனுஷி சில்லர் (2017) என மொத்தம் ஆறு பேர் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இந்தியா சார்பாக, மிஸ் இந்தியா பட்டம் வென்ற சினி ஷெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











