சிரஞ்சீவி மீது முட்டை வீசிய டிஆர்எஸ்!

ஆந்திர மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தனது கட்சியைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் உள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கானா பகுதியில் தற்போது சிரஞ்சீவி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று வாரங்கல் மாவட்டம் நரசம்பேட்டையில் அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் திடீரென கூட்டத்திலிருந்த சிலர் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவியை நோக்கி அழுகிய முட்டைகளை வீசினர். அதில் ஒரு முட்டை நேராக சிரஞ்சீவியின் முகத்தை தாக்கியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கட்சி நிர்வாகிகள் சிரஞ்சீவியை சூழ்ந்து கொண்டு நின்றனர். பின்னர் வீசப்பட்ட முட்டைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்கள் மீது விழுந்தன.
இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து முட்டைகளை வீசிய ஆசாமிகளை கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உடனடியாக கூட்டத்தினரை நோக்கி பேசிய சிரஞ்சீவி, 'என் மீது வீசப்படும் மலர் செண்டுகளையும், அழுகிய முட்டைகளையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன். இதனால் நான் தளர்ந்துவிட மாட்டேன். எனது பயணம் தொடரும். கோடிக் கணக்கான மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், அவர்களுக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயார், என்றார்.
இதற்கிடையில் போலீசில் ஒப்படைக்கப்பட்ட ஆசாமிகள் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











