'இந்தியன் 2' விபத்து.. டைரக்டர் ஆகும் ஆசையில் ஷங்கரிடம் 8 வருடமாக பணியாற்றிய மது.. சகோதரர் கண்ணீர்
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மதுசூதனன், இயக்குனர் ஷங்கரிடம் 8 வருடமாக பணியாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கமல் நடிக்கும் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது.

கிரேன் விழுந்தது
நேற்று முன்தினம் இரவு, 9.40 மணியளவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
இதில், பணியில் இருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா), ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மதுசூதனன் (29) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை
படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த மதுசூதனன், இயக்குனர் ஷங்கரிடம் கடந்த 8 வருடமாக பணியாற்றி வந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.

சைகையால்
இயக்குனர் ஆகும் ஆசையில் ஆந்திராவில் இருந்து சென்னை வந்த அவர், ஷங்கர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதை அவரது சகோதரர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இவரும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார். மகேந்திரன் கூறும்போது, செட்டில் சுமார் 850 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். டின்னர் நேரம் என்பதால் சுமார் 500 பேர் அந்த இடத்தில் இல்லை. என் சகோதரன் சீக்கிரம் சாப்பிடு என்று என்னிடம் சைகையால் சொன்னான்.

திருமணம்
அடுத்த நொடி கிரேன் கீழே விழுந்து பரபரப்பானது. அவன் செல்லுக்கு போன் செய்தேன். ரிங் போய் கொண்டிருந்ததால், அவனுக்கும் ஒன்று ஆகி இருக்காது என நினைத்தேன். ஆனால், பிறகுதான் தெரிந்தது, அவன் தலை நசுங்கி விட்டது என்பது' என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பம் மதுவுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளது. இதற்கு முன் ஷங்கரின் 2.0 படத்தில் வேலைபார்த்தபோது மதுசூதனனுக்கு பைக் விபத்து ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











