Indian 2 Intro: இந்தியன் 2 இன்ட்ரோவில் விவேக், மனோபாலாவுக்கு Tribute... ரசிகர்கள் உருக்கம்!
சென்னை: கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இன்ட்ரோ வீடியோவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதேநேரம், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோருக்கு Tribute செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை உருக்கமடைய செய்துள்ளது.
விவேக், மனோபாலா, நெடுமுடி வேணுவுக்கு Tribute
உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2, தற்போது இறுதிக்கட்டத்தை தொட்டுவிட்டது. 2017ம் ஆண்டு தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு, அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தது. பட்ஜெட் சிக்கல், கிரேன் விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் பலி என கிடப்பில் கிடந்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னரே இந்தியன் 2-வை மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்தியன் 2, இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாம். இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோர் ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் நடித்த காட்சிகள் எதுவும் எடிட் செய்யப்படாமல் படத்தில் இருக்கும் என சொல்லப்பட்டது. அதனை உறுதிசெய்யும் விதமாக இந்தியன் 2 இன்ட்ரோவில் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோருக்கு Tribute கொடுத்துள்ளது படக்குழு.

இந்தியன் முதல் பாகத்தில் போலீஸ் ஆபிஸராக நடித்திருந்தார் நெடுமுடி வேணு. மலையாளத்தில் முக்கியமான நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு, 2021ம் ஆண்டு உயிரிழந்தார். அதேபோல், இதுவரை கமல்ஹாசனுடன் நடித்ததில்லை என்ற குறையை இந்தியன் 2 மூலம் தீர்த்துவிட்டேன் என கூறிக்கொண்டிருந்தார் விவேக். ஆனால், அவரும் 2021ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நடிகர் மனோபாலா இந்தாண்டு மே 1ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த மூவருமே திரையுலகின் லெஜண்ட்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து அவர்களது காட்சிகள் இந்தியன் 2 இன்ட்ரோவில் இருப்பது ரசிகர்களுக்கு உருக்கமாக அமைந்துள்ளது. இதனை அவர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











