Indian 2: கமல், ஷங்கர் எடுத்த திடீர் முடிவு... இந்தியன் 2 ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தியன் 2, தற்போது சம்மர் ஸ்பெஷலாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2 ரிலீஸ் தேதி
கமல், ஷங்கர் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கெட்டப் அப்போது ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. அதே கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது உருவாகியுள்ள இந்தியன் 2-வில் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளாக இந்தியன் 2 உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் பிரச்சினை, கிரேன் விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழப்பு என பல தடைகளை கடந்து இந்தியன் 2 முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என முதலில் செய்திகள் வெளியாகின. ஒரேநேரத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கினார் ஷங்கர். இதனால் இந்தியன் 2 போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிய தாமதமாகும் என சொல்லப்பட்டது.
அதேபோல், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் காட்சிகளும், இரண்டு பாடல்களும் ஷூட் செய்ய வேண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியன் 2 ரிலீஸ் இப்போதைக்கு இருக்காது என்றே சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தை மே மாதம் ரிலீஸ் செய்துவிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால், தங்கலான் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் சம்மர் ரிலீஸில் இருந்து பின்வாங்கிவிட்டன.
இதனால் இந்தியன் 2 படத்தை மே மாதம் ரிலீஸ் செய்தால் கல்லா கட்டிவிடலாம் என கமலும் ஷங்கரும் பிளான் செய்துள்ளார்களாம். அதன்படி மே 16 அல்லது 30ம் தேதி இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











