Indian 2: காஜல் அகர்வாலின் பிரார்த்தனை வீண் போகவில்லை
சென்னை: இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்டோரை வைத்து எடுப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்தார். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு தடைபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியன் 2 பட்ஜெட் அதிகம் என்று கூறி லைகா நிறுவனம் பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகின. லைகா ஒத்துவராவிட்டால் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். இந்நிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர், லைகா இடையே சமரசம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கமல் கோரிக்கை விடுத்தபடி செய்தார் ஷங்கர். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கமல் ஹாஸன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டார்.
இதற்கிடையே இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக மீண்டும் பேச்சு கிளம்பியது. ஷங்கர் இந்தியன் 2 படத்தை விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம்.
ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் துவங்குகிறார்களாம். இந்த படத்திற்காக காஜல் புது வித்தை எல்லாம் கற்றார். ப்ராஸ்தெடிக் மேக்கப்புக்கு அளவு கொடுக்க அமெரிக்கா சென்று வந்தார். படம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்தபோது காஜல் அகர்வால் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இந்தியன் 2 படம் கைவிடப்படக்கூடாது என்கிற காஜலின் வேண்டுதல் வீண் போகவில்லை.
முழு நேர அரசியலில் ஈடுபடும் கமல் நடிக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியின் கோமாளி மற்றும் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தமன்னா நடிக்க மறுத்த தெலுங்கு படமான ராஜு காரி காதி 3 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











