அரசியலில் பிசி.. கமல் இல்லாமல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு.. பிப்ரவரியில் தொடங்க படக்குழு முடிவு!
சென்னை: கமல்ஹாசன் இல்லாமல், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை அடுத்த மாதம் தொடங்க, படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.
மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடிவேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

ரகுல் பிரீத் சிங்
இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

கிரேன் அறுந்து
கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பு
பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக, ஷூட்டிங் தடைபட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. கமல்ஹாசன் இப்போது அரசியல் பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த மாதம்
இதனால், அவர் இல்லாமல் மற்றவர்கள் நடிக்கும் காட்சியை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அடுத்த மாதம் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகர்களிடம் கால்ஷீட் பற்றி படக்குழு பேசிவருகின்றனர்.

ஒரே கட்டமாக
நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சி விரைவில் முடிய இருக்கிறது. இதற்கிடையே, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் ஷூட்டிங்கிலும் பங்கேற்க இருக்கிறார். இந்த படத்தை ஒரே கட்டமாக முடிக்க கமல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











