இந்திய சினிமா 100- சென்னை தியேட்டர்களில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி, கமல் ஸ்பெஷல்!
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட சாதனை நாயகர்களின் படங்களைத் திரையிடுமாறு பிலிம்சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழா செப்டம்பர் 21-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
24-ந்தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து மொழிகளையும் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாக்குழு தலைவர் கல்யாண் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ஒரு வாரமும் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் பழைய மறக்கமுடியாத படங்களை திரையிடும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு சிகரங்களின் சாதனைப் படங்களைத் தேர்ந்தெடுத்து தினசரி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல இன்றைய தலைமுறையின் சாதனை நாயகர்களான ரஜினி, கமலின் படங்களையும் திரையிடுமாறு பிலிம்சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
ரஜினியின் ஆறிலிருந்து அறுபதுவரை, பில்லா, மனிதன், படிக்காதவன், வேலைக்காரன், அண்ணாமலை, படையப்பா, முத்து, பாட்ஷா, சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களும், கமல்ஹாஸனின் அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள், தசாவதாரம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











