Virat: சினிமாவாகும் கிங் கோலி வாழ்க்கை.. விராட்டாக நடிக்கும் தமிழ் நடிகர்.. அது மட்டும் நடந்தால்..
சென்னை: இந்திய சினிமாவில் அவ்வப்போது சில வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. அண்மையில் கூட வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு (அமரன்) படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதில் தமிழ் நடிகரான சிம்பு நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்ததில் இருந்து, இப்போது வரை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரராக உள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் ஒவ்வொன்றையும் விராட் கோலி தகர்த்து, புதிய வரலாற்றை படைத்து வருகிறார்.

ஐபிஎல் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை இவரது ஆதிக்கம் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார். ரன் மெஷின், கிங் கோலி என இவருக்கு ரசிகர்கள் பல புனைப்பெயர்களை வாரி வழங்கி வருகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பப்ளிக் ஃபிகராக உள்ள விராட் கோலி வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளது.
விமர்சனம்: அவரது திருமண வாழ்க்கை தொடங்கி, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ஒரு கோப்பை கூட வென்று கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனத்திற்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார். கோப்பைகள் இல்லை என்றாலும் விராட் மீது பேரன்பு பொழியும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ளார்கள். விராட் கோலி மீது ரசிகர்கள் அன்பைப் பொழிய முக்கிய காரணம் அவரது ஆக்ரோஷமான ஆட்டம்தான்.

கிங் கோலி: 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரீஸ் ரவுஃப் வீசிய பந்தை அவரது தலைக்கு மேலே அசால்ட்டாக சிக்ஸராக அடித்து, இந்த நூற்றாண்டின் தலை சிறந்த சிக்ஸராக அதனைப் பதிவு செய்தார். விராட் கோலி ஒரு மேட்ச் வின்னர். ஒரு போட்டியில் அவருக்கு சப்போர்ட்டிவாக கடைசி வீரர் இருந்தாலும் கூட ஆட்டத்தை எதிரணியிடம் இருந்து பறித்து, அதனை தனது வெற்றியாக மாற்றும் வல்லமை படைத்தவர். களத்தில் ஆஸ்திரேலியர்கள் தான் ஆக்ரோஷமாகவும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள், இந்தியர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள் என்ற பேச்சுகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவுக்கு சென்றே அவர்களை கதிகலங்க வைத்தவர் விராட்.

சிம்பு: அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. காரணம் விராட் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார். அவரது கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்ற தகவலும் தற்போது உலா வருகிறது. ஏற்கனவே சிம்பு தனது 49, 50 மற்றும் 51 வது படங்களில் கமிட் ஆகிவிட்டார். எனவே, விராட் கோலி வாழ்க்கை வரலாற்றில் சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டால், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அண்மையில் விராட் கோலி அளித்த பேட்டியில் அவர் அதிகம் கேட்கும் பாடல், சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள நீ சிங்கம் தான் பாடல் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











