Coolie: கூலி படத்தில் லோகேஷ் இறக்கிய தரமான வின்டேஜ் சம்பவம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. என்ன தெரியுமா?
சென்னை: கூலி படத்தில் இருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ் செய்யப்பட்டதுதான் செய்யப்பட்டது, ஒரு புறம் பூஜா ஹெக்டேவின் கிளாமர் நடனத்தை டிரெண்ட்டாக்கும் ரசிகர்கள் ஒருபுறம் மறுபுறம் பாடல் இடம் பெற்றுள்ள மோனிகா என்ற பெயர் கொண்ட இத்தாலிய நடிகையை தேடித்தேடி அவர் குறித்து தெரிந்து கொள்ளும் ரசிகர்கள் ஒருபுறம். இதனாலோ என்னவோ மோனிகா இப்போது டிரெண்ட்டிங் உள்ளார். இந்நிலையில் யார் அந்த மோனிகா என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மோனிகா அன்னா மரியா பெலூசி இதுதான் அவரது முழுப்பெயர். செப்டம்பர் 30, 1964 அன்று பிறந்தவர். இவர் இத்தாலியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் ஆவார். இவருடைய அழகு, நடிப்புத் திறமை மற்றும் பல மொழிகளில் திரைப்படங்களில் பங்களித்திருப்பதன் மூலம் உலக அளவில் ஒரு நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். 1990-களில் தனது தனித்துவமான அழகினால் உலகையே கவர்ந்த மோனிகா, தற்போதும் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வருகிறார்.
மோனிகா 16 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த அவர், பெருச்யியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். தனது படிப்பிற்கான கட்டணத்தை ஈடுகட்ட மாடலிங் துறையில் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர், 1988-இல் மிலனுக்குச் சென்ற அவர், "எலைட் மாடல் மேனேஜ்மென்ட்" நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, டோல்ஸ் & கபனா, டியோர் மற்றும் பிரெஞ்சு எல்லே போன்ற முன்னணி பிராண்டுகளுக்காக மாடலாகப் பணியாற்றினார்.

1991-ஆம் ஆண்டு "வீடா கோய் ஃபில்ஜி" என்ற இத்தாலிய தொலைக்காட்சித் தொடரின் மூலம் மோனிகா தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். 1992-இல் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலாவின் "பிராம் ஸ்டோக்கர்ஸ் டிராகுலா" திரைப்படத்தில் டிராகுலாவின் மனைவிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் உலகளவில் அறியப்பட்டார். 1996-இல் "தி அபார்ட்மென்ட்" என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நடித்ததற்காக சீசர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்: மோனிகா பெலூசியின் புகழ்பெற்ற திரைப்படங்களில் "மாலேனா" (2000), "இர்ரிவர்சிபிள்" (2002), "தி பேஷன் ஆஃப் தி கிறைஸ்ட்" (2004), மற்றும் "தி மேட்ரிக்ஸ் ரிலோடட்" மற்றும் "ரிவல்யூஷன்ஸ்" (2003) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான "ஸ்பெக்டர்" திரைப்படத்தில் நடித்து, 50 வயதில் பாண்ட் பெண்ணாக நடித்த முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றார். இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கும் இவர், டேவிட் டி டொனாடெல்லோ, குளோபோ டி'ஓரோ மற்றும் நாஸ்ட்ரோ டி'அர்ஜென்டோ போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். 2018-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இத்தாலி இவரை இத்தாலியின் மிகவும் வெற்றிகரமான 100 பெண்களில் ஒருவராக அறிவித்தது.

கூலியில் மோனிகா: மோனிகா பெலூசி தற்போது இந்தியத் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படத்தின் இரண்டாவது பாடல் மோனிகாவின் பெயரை மையமாக வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் 90-களின் பேரழகியாக அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும், அழகையும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. இதனால் ரசிகர்கள் மோனிகா பெலுசி குறித்து இணையத்தில் தீவிரமாக தேடி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் தனது படத்தில் எப்படியாவது ஒரு வின்டேஜ் பாடலை இடம்பெறச் செய்துவிடுவார். அப்படி இருக்கும்போது, கூலி படத்தில் வின்டேஜ் கதாநாயகி மோனிகா பெலுசி குறித்து பாடல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமண வாழ்க்கை: மோனிகா பெலூசி 1990-ஆம் ஆண்டில் இத்தாலிய நடிகர் கிளாடியோ கார்லோஸ் பாசோவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1994-ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். பின்னர், 1999-ஆம் ஆண்டில் பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் காசலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டெயானா (2004), லியோனி (2010) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இந்த திருமணமும் முடிவுக்கு வந்தது. தற்போது மோனிகா தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, திரையுலகில் தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். "கூலி" திரைப்படப் பாடல் மூலம் இந்தியாவில் அவரது பெயர் மீண்டும் உச்சரிக்கப்படுவது, அவர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை நிரூபிக்கும் சாட்சியமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











