Indian Re Release Box Office: தியேட்டர்களை தெறிக்கவிட்ட இந்தியன் தாத்தா.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, நாசர், நெடுமுடி வேணு, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆனது.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் ரீ ரிலீஸ் படங்கள் அதிக அளவில் வெளியாகி தியேட்டர்களை உயிர்ப்புடன் வைத்து இருக்க உதவி வருகின்றன. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு நேற்று இந்தியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

28 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மிரட்டலான படத்தை ஷங்கர் கொடுத்திருக்கிறாரே என ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்து ரசித்தனர். இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசன் வரும் காட்சிக்கு எல்லாம் விசில் சத்தம் பறந்தன.
ஷங்கரின் பிரம்மாண்டம்: இந்தியன் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே தனி அந்தஸ்தை பெற்ற படமாக ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை இன்றும் கனெக்ட் செய்யும் விதமாக உள்ளது. சேனாபதியாக கமல்ஹாசன் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக போராடுவதும் அதன் பின்னர் வயதான காலத்தில் லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுப்பதும் என ஒரு பக்கம் கலக்க, சந்துரு கமலாக லஞ்சத்திலும் ஊழலிலும் திளைத்து இருக்கும் நபராகவும் நடித்து அசத்தியிருப்பார்.
ரீ ரிலீஸ்: இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தை புரமோட் செய்யும் விதமாக 2கே கிட்ஸ்களுக்கும் இந்தியன் தாத்தாவை அறிமுகம் செய்யும் விதமாக இந்தியன் திரைப்படம் நேற்று மீண்டும் வெளியானது. ரோபோ சங்கர் இந்தியன் தாத்தா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்தார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் இந்தியன் தாத்தா டிசர்ட் அணிந்துக் கொண்டு படத்தை பார்த்து ரசித்தார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் படத்தை கொண்டாடினர். தியேட்டருக்கு புஸ்பானம் வைத்து வெடித்தது சர்ச்சையை கிளப்பியது.
முதல் நாள் வசூல்: கில்லி படம் அளவுக்கு இந்தியன் ரீ ரிலீஸ் ஓடவில்லை என்றாலும் இந்த வாரம் வெளியான புதிய படங்களான ஹரா, வெப்பன், அஞ்சாமை உள்ளிட்ட படங்களை விட அதிக வசூலை இந்தியன் ரீ ரிலீஸ் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 1.1 கோடி ரூபாய் வசூலை இந்தியன் படம் எடுத்திருப்பதாக கூறுகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இந்தியன் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 டிரெய்லர் எப்போ?: ஜூன் 10ம் தேதி கல்கி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் இந்தியன் 2 டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இன்னொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியையும் ஷங்கர் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். வரும் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











