28 வருஷத்துக்கு பின் வீட்டுக்கு வரும் வாரிசு.. வம்சத்தை வளர்த்த தேவதை.. கலங்கிய இந்திரஜா மாமியார்!
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு படுகோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பலரும் அம்பானி வீட்டு திருமணத்தோடு ஒப்பிட்டு ட்ரோல் செய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்திரஜாவிற்கு தடபுடலாக வளைகாப்பு விழா நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திரஜாவின் மாமியார், என் வம்சத்தை வளர்க்க வந்த குலசாமி என கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, விருமனில், அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, முறை மாமாவை திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

நடிகர் ரோபோ ஷங்கர்: ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கிற்கும், இந்திரஜாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் தடபுடலாக நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த இந்த திருமணத்தில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா என பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
வளைகாப்பு விழா: இதைத்தொடர்ந்து இந்திரஜாவும் கார்த்திக்கும் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூறியிருந்தார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய இந்திரஜா, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால வீடியோவை வெளியிட்டு வந்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்திரஜாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த வளைகாப்பில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.
என் வீட்டு குலசாமி: அப்போது பேசிய இந்திரஜாவின் மாமியார், எங்கள் வீட்டுக்கு 28 வருடங்களுக்கு பிறகு வாரிசு வருகிறது. அந்த வாரிசை வரவேற்பதற்காக நான் தயாராக இருக்கிறேன். என் வீட்டு குலவிளக்கு, என் வம்சத்தை வளர்க்க வந்த தேவதை, இந்திரஜா வீட்டிற்கு ஒரே குழந்தை, கார்த்திக்கும் ஒரே குழந்தை என்பதால் வீட்டிற்கு வாரிசு வர வேண்டும் என்று பல நாள் ஆசைப்பட்டு இருக்கிறேன். அந்த ஆசை என் பாப்பா நிறைவேற்றி வைத்துவிட்டாள். அந்த சந்தோஷத்தை வார்த்தையால் சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று இந்திரஜாவிற்கு மாறி மாறி முத்த மழை பொழிந்தார் இந்திரஜாவின் மாமியார்.


Click it and Unblock the Notifications











