Indraja: மகனுக்கு மொட்டை அடித்து காது குத்திய இந்திரஜா.. கண் கலங்க வைத்த ரோபோ சங்கர் இல்லாத குறை.. வீடியோ
சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் தனது மகன் நட்சத்திரனுக்கு மொட்டை அடித்து காது குத்தியதை மொத்தமாக வீடியோவாக எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த அழகான தருணத்தை எல்லாம் பார்க்க ரோபோ சங்கருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், இந்திரஜாவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அப்பா ( ரோபோ சங்கர்) நீங்க இல்லாத குறை மட்டும் தான் என்று பதிவிட்டுள்ளார்.
இந்திரஜாவின் பதிவில், “மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலுக்கு
எங்க வீட்டு ராஜாவுக்கு
மொட்டை அடிச்சு காது குத்தியாச்சு...
அம்மா-அப்பாவுக்கு
இது ஒரு சடங்கு மட்டும் இல்ல...
மனசுக்குள்ள நெகிழ்ச்சியோட
நினைவுகளும் கலந்த நாள்.

அம்மாத்தா-அப்பாத்தாவுக்கு
'எங்க பேரன்'ன்னு
மார்புல தட்டிக்குற பெருமை...
இன்று இந்த நொடி நீங்க மட்டும் இல்லாத குறைதான்
எங்க சந்தோஷத்துக்குள்ள
மெதுவா கண்ணீர் கலக்குது...
உங்க பேரன் வாழ்க்கை முழுக்க
உங்க ஆசீர்வாதம் நிழலா இருக்கட்டும்.....
அனைவரும் எங்க வீட்டு ராஜா உங்க நட்சத்திரணை வாழ்த்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் குடும்பமாக நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி வருகிறார்கள்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் ரோபோ சங்கருக்கு இரண்டு படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டது. வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் இரவின் நிழல் என மொத்தம் இரண்டு படங்களுக்காக மாநில விருது வழங்கப்பட்டது. அதேபோல் அவரது மகள் இந்திரஜாவுக்கு விருமன் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகை விருது வழங்கப்பட்டது. மொத்தம் மூன்று விருதுகளை ரோபோ சங்கர் குடும்பம் வென்றது. ரோபோ சங்கருக்கான விருதை அவரது மனைவி பிரியங்கா தனது பேரன் நட்சத்திரனை அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்று வாங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரோபோ சங்கரின் பேரன் நட்சத்திரனுக்கு மெடலை அணிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நட்சத்திரனின் காது குத்து வீடியோவில் மொத்த குடும்பமும் செம ஹேப்பியாக இருக்கிறார்கள். குறிப்பாக காது குத்தும் போது குழந்தை அழுதது, அதன் பின்னர் மாலை அணிவித்து ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்சியது. கோவிலிலேயே பொங்கல் வைத்து பொங்கலை அனைவருக்கும் வழங்கி, அவர்களும் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து சாப்பிட்டது என அனைத்தும் வீடியோவில் உள்ளது. மேலும் குழந்தை நட்சத்திரனை கோவிலுக்குள் செல்வது போல படியில் தவழந்தே ஏற வைத்துள்ளனர். இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் என இருவரும் குழந்தையின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கோவிலுக்குள் அழகாக நடந்தும் வருகிறார்கள். இநத வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications