தங்கம் போல ஜொலிக்கும் இந்திரஜா சங்கர்.. தாலி கட்டிய தாய்மாமன்.. தடபுடலாக நடைபெற்ற திருமணம்!
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கும் அவரது தாய் மாமனான கார்த்திக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், தற்போது அதை விட தடபுடலாக மதுரையில் திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சூரி, விஜய்சேதுபதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்களுக்கு குடும்பத்துடன் சென்று திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர். திருமண விழாவுக்கு பலர் செல்லாத நிலையில், சென்னையில் விரைவில் இன்னொரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்திரஜா சங்கர் திருமணம்: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் காமெடி நடிகையாக நடித்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மாமா கார்த்திக்கிற்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (மார்ச் 24) மதுரையில் உள்ள ஜேபி மஹாலில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் தடபுடலாக நடைபெற்றது.
தங்கம் போல ஜொலிக்கும் இந்திரஜா: இந்திரன் வீட்டு மகளின் திருமணம் போலவே இந்திரஜாவின் திருமண விழாவை ரோபோ சங்கர் நடத்தி உள்ளார். சினிமா பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். தங்கம் போன்று ஜொலிக்கும் பட்டுப் புடவையில் இந்திரஜாவும் அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக பட்டுச் சட்டையில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஐஸ்வர்யா போட்டோஸ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
பிரபலங்கள் வாழ்த்து: இந்திரஜா சங்கர் திருமணத்துக்கு நேரில் சென்றும் செல்ல முடியாத பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இந்திரஜா சங்கருக்கு அவரது ரசிகர்களும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வீட்டுத் திருமண விழா இன்று மதுரையில் களைகட்டிய நிலையில், அதன் புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகின்றன.


Click it and Unblock the Notifications











