கருப்பு இந்திரன்ஸ்க்கு ஜோடியாக மதுபாலா.. சின்ன சின்ன ஆசை டிரைலரைப் பாருங்க
சென்னை: கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றப் படம் கருப்பு. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சூர்யாவுக்கு மிகப்பெரிய தியேட்டரிக்கல் வெற்றி என்பதால் படம் பெரிதும் பேசு பொருளானது. மேலும் படத்தில் நடித்திருந்த பலரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இருக்கையில் படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சின்ன சின்ன ஆசை.
இந்திரன்ஸ் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் சீனியர் நடிகர்களில் ஒருவர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த பல படங்கள் மலையாள சினிமாவை கடந்தும் பெரிதும் வெற்றிகளை ஈட்டி உள்ளது. குணச்சித்திர நடிகரான இவரது நடிப்பில் பல படங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

கருப்பு படத்தில் கூட, சூர்யாவின் கைகள் முழுவதும் நகையை வைத்துவிட்டு எனக்கு ஜி பே பண்ணத் தெரியாது சார் என்று கூறி அழுது கொண்டே நடந்து செல்லும் காட்சி மிகவும் முக்கியமானது. இப்படி இருக்கையில் நடிகர் இந்திரன்ஸ் நடிகை மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சின்ன சின்ன ஆசை. இந்த படத்தை வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கி உள்ளார். இசையாலே இதயங்களை உருகச் செய்யும் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சின்ன சின்ன ஆசை: படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் இந்திரன்ஸ்க்கு ஜோடியாக மதுபாலா நடித்துள்ளார். அதேபோல் படம் முழுவதும் வாரணாசியில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் சின்ன சின்ன ஆசை என்று இருப்பதால் தமிழில் மதுபாலா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான ரோஜா படத்தின் தாக்கம் இந்த படத்திற்கு இருக்குமோ என்ற ஆவலான கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாராட்டு: மேலும் டிரைலரில் இந்திரன்ஸ் மிகவும் அழகாக இருப்பதுடன் முதிர்பருவத்து காதல் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு உருவாக்கும் விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் பலரும் பாராட்டி வருகிறார்கள். மதுபாலாவிடம் அவர் Sorry கேட்கும் காட்சியை பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள். படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications