twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைம்பெண் கதைகூறலில் துணிச்சலான முயற்சி - இன்று நீ நாளை நான்

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    'பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...' என்னும் ஜானகியம்மாவின் பாடலைக் கேட்டிருக்கிறோம்.

    'தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ...
    பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ...
    மலர்க்கணை பாயாதோ...
    மதுக்குடம் சாயாதோ...
    இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகைதானம்மா....
    மழை காமன் காட்டில் பெய்யும் காலம் அம்மா!'

    Indru Nee Naalai Naan

    ...என்று அந்தப் பாடலில் இழையும் ஜானகியம்மாவின் தளிர்க்குரலை எப்படி மறக்க முடியும்? பெண் தாபத்தை அருமையாய் எடுத்தியம்பும் அப்பாடல் இடம் பெற்ற படம் 'இன்று நீ நாளை நான்.' அந்தப் பாடற்காட்சியை இணையத்திலும் தொலைக்காட்சியிலும் பன்முறை கண்டிருக்கிறேன். அழுந்தத்திருத்தமான கதைச் சூழலில் அப்பாடல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை விளங்கிக்கொண்டேன்.

    Indru Nee Naalai Naan

    என் நண்பர் கரு. ஆறுமுகத் தமிழனின் தந்தையார் பழ. கருப்பையா தயாரித்த திரைப்படம். அவர் பேராயக் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் சிவாஜியின் நண்பர்கள் அன்னார்க்கும் நண்பர்களாய் இருந்திருக்கின்றார்கள். சிவாஜின் நெடுநாள் நண்பரும் தேர்ந்த நடிகருமான மேஜர் சுந்தரராஜன் 'இன்று நீ நாளை நான்' படத்தின் இயக்குநர். "அப்பா எப்படித் திரைத்துறைக்கு ஒரு தயாரிப்பாளராக வந்தார் ?" என்று கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆறுமுகனாரிடம் கேட்டிருக்கிறேன். "மேஜர்தான் காரணம்" என்று சொன்னார்.

    Indru Nee Naalai Naan

    எண்பதுகளின் மிகப்பெரிய பெண்ணடக்குமுறையாக இருந்த கைம்பெண் உணர்வுகள்தாம் படத்தின் கதைக்கரு. யாரும் தொடத்தயங்குகின்ற பொருளில் ஆக்கப்பட்டிருந்த அப்படம் இன்றைக்கும் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான். இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல் ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்றாலே அந்தப் படத்தில் ஏதோ ஒரு மேன்மை இருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

    ஊர்ப் பண்ணையாரின் ஒரே மகன் மருதாசலம். அவர் பண்ணையில் வேலையாளாக வீட்டோடு தங்கியிருப்பவன் பழநியப்பன். வேலைக்காரன் என்றாலும் வீட்டிற்கு இளைய பிள்ளையைப்போல் விளங்குபவன். பழநியப்பன் மருதாசலத்தைத் தன் தமயனாகவும் மருதின் தாய் தந்தையையே தன் தாய் தந்தையாகவும் கருதுபவன். அரை ஏக்கருக்குத் தரிசும் ஓட்டுவீடும் அவன் உடைமை. அதனால் மருதாசலத்தின் குடும்பத்தை அண்டி வாழ்பவன். பட்டாளத்தில் பணியாற்றும் பெரியப்பா மகன் ஒருவனைத் தவிர வேற்றுறவுகள் அற்றவன். பண்ணை வேலைகள் அனைத்தையும் பழநியப்பனே பார்த்துக்கொள்வதால் மருதனின் நாட்டம் உள்ளூர் அரசியலில் செல்கிறது. அவ்வூர் ஊராட்சித் தலைவரும் மருதாசலம்தான். வீட்டுக்கு அடங்காமல் கட்சி, கூட்டம் என்று தற்போக்கில் திரிவதால் மருதனுக்கு ஒரு கால்கட்டு போட்டுவிட வேண்டும் என்று வீட்டினர் எண்ணுகிறார்கள்.

    Indru Nee Naalai Naan

    மருதுக்குப் பெண் பார்க்கும் பொறுப்பைப் பழநியப்பனே எடுத்துக்கொள்கிறான். சந்தைக்குச் செல்கையில் பெண் தேடி அலைகிறான். சந்தையிலிருந்து திரும்பி வருகையில் ஒரு தென்னந்தோப்பில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்போது பாப்பாத்தியையும் வள்ளியையும் பார்க்கிறான். பாப்பாத்தியின் பேரழகில் பேச்சிழந்து நிற்கும் பழநியப்பன் "கட்டிக்கிறீங்களா?" என்று கேட்டே விடுகிறான். "யாரை ?" என்று வள்ளி இடைமறித்துக் கேட்க "என்னை" என்று சொல்வதற்குத்தான் அவனுக்கு வாய் வருகிறது. அதற்குள் நினைவிடைப்பட்டவனாகி "எங்க அண்ணனை" என்று சொல்கிறான். அந்நேரத்தில் அங்கே வரும் மருதாசலமும் பாப்பாத்தியைப் பார்க்கிறான். மருதுக்கும் பிடித்துவிட, அவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம் பேசி முடிக்கச் செல்கிறான்.

    பாப்பாத்தி அவ்வூர்ப் பெரிய மனிதரின் வைப்பாட்டி மகள். அதனால் பாப்பாத்தியின் பிறப்பைப் பலரும் இகழ்ந்து கூறுகின்றனர். அதனால் மருதாசலத்தின் பெற்றோர்க்கும் பாப்பாத்தியைக் கட்டுவதில் விருப்பமில்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறியே தன் கட்சித் தலைவரின் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொள்கிறான் மருது. மருதாசலத்தின் அரசியல் வைரியான சுப்பையா இந்தத் திருமணத்தால் மருது தன் சொந்த சாதிக்கு எதிராக நடந்துகொண்டதைப் பரப்புரை செய்து அரசியலில் வீழ்த்தலாம் என்று எண்ணுகிறான். திருமணம் முடிந்த கையோடு ஊர்க்கலவரம் குறித்த செய்தி வருகிறது. மணப்பெண் பாப்பாத்தியை மாலையும் கழுத்துமாக விட்டுவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான் மருது. இதனால் வீட்டினரிடையே சலசலப்பு. அனைவரையும் பழநியப்பன்தான் அமைதிப்படுத்துகிறான். திரும்பி வீட்டுக்கு வரும் மருது களைப்பில் உறங்கிவிடுகிறான். முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்ட இரவிலும் இதுபோல் ஒரு செய்திவர கிளம்பிச் செல்கிறான்.

    Indru Nee Naalai Naan

    பாப்பாத்தியின் தோழி வள்ளி பழநியப்பனை விரும்புகிறாள். பாப்பாத்தியின் முயற்சியால் வள்ளிக்கும் பழநியப்பனுக்கும் திருமணம் நடக்கிறது. நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தன் தொகுதியில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று மருது சென்னை செல்கிறான். திருமணத்தின்பின் பாப்பாத்தியும் மருதும் சேரவே இல்லை. கட்சிக்கு ஒரு இலட்சம் பணம் கொடுத்து தேர்தலில் வேட்பாளராகிறான் மருது. வீட்டையும் தோட்டத்தையும் அடகு வைத்துப் பணம்புரட்டிப் போட்டியிடுகிறான். இதற்கிடையே வள்ளி தாய்மையடைகிறாள். தனக்குப் பின்னால் திருமணமானவள் பிள்ளை பெறப்போக, தனக்கு அதற்கான உறவே நிகழவில்லையே என்னும் தாபம் பாப்பத்தியை வாட்டுகிறது. பழநியப்பனும் வள்ளியும் கலப்பதையும் அவள் காண நேர்கிறது. தனக்குள்ளாகப் போராடுகிறாள்.

    Indru Nee Naalai Naan

    தேர்தல் பரப்புரைக்காக மருதாசலத்தின் வீட்டுக்கு வரும் கட்சித் தலைவர் மருதுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்துகிறார். தேர்தலில் மருது தோற்றுவிடுகிறான். அரசியல் எதிரியான சுப்பையா வெல்கிறான். அத்தோல்வியைத் தாங்காத மருதின் தந்தை நெஞ்சடைத்து இறக்கிறார். மருதுக்கு இல்லறத்தில் நாட்டம் போய்விடுகிறது. குடிக்கு அடிமையாகிறான். எந்நேரமும் குடித்துக்கொண்டே இருந்ததில் ஈரல் கெட்டுப்போகிறது. இரத்த வாந்தி எடுத்துச் சாகிறான். இப்போது பாப்பாத்தி வெள்ளையுடுத்திய கைம்பெண். ஒரே வீட்டில் மாமியாரும் மருமகளும் வெள்ளுடை தரிக்கின்றனர்.

    Indru Nee Naalai Naan

    பழநியப்பன் பண்ணையில் முன்னிலும் நன்கு பாடுபட்டு மருது பட்ட கடனை அடைக்கிறான். சுப்பையா பாப்பாத்தியை அடையும்பொருட்டு வீட்டுக்கே இரவில் வந்து தகராறு செய்கிறான். மருது தனக்குக் கொடுத்துச் சென்ற கைத்துப்பாக்கியைக் காட்டி அவனை மிரட்டி அனுப்புகிறாள் பாப்பாத்தி. வள்ளி இரண்டாம் பிள்ளைப் பேற்றுக்காகத் தாயகம் செல்ல, பாப்பாத்திக்குத் தன் வாழ்வில் பாதுகாப்பைத் தேட வேண்டிய கட்டாயம். ஒரு மழைநாளில் மரத்தடியில் அவர்கள் இருவரும் ஒதுங்குகிறார்கள். தன் கைம்மையை மீறி தான் அன்புற்றிருக்கும் ஓர் ஆண்மகனை விழைந்து ஒரு பெண் தன் காதலை விளக்கும் காட்சி வருகிறது. தமிழ்த் திரையில் காட்டப்பட்ட உணர்ச்சிமயமான கட்டம் அது. இலட்சுமியைத் தவிர வேறெந்த நடிகையாலும் அந்தக் காட்சிக்கு உயிர்ப்பூட்டியிருக்க முடியுமா என்பது ஐயமே. அந்த இடத்தில்தான் முதற்பத்தியில் சொன்ன பாடல் இடம் பெறுகிறது.

    பாப்பாத்தி பழநியப்பனை வேண்டுகிறாள். "நான் என் தோழி வள்ளிக்குச் சக்களத்தியாக வாழ்ந்துவிட்டுப் போகிறேன்," என்பது பாப்பாத்தியின் முடிவு. "இதற்கு வள்ளி ஒத்துக்குவாளா ?" என்ற ஐயமிருந்தாலும் பழநியப்பன் ஒத்துக்கொள்கிறான். இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காகச் செல்கையில் வழியில் ஒருவர் உயிருக்குப் போராடுகிறார். அவரை அவர் வீட்டில் விட்டு வர பழநியப்பன் செல்கிறான். வள்ளிக்கு அவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போவது தெரிந்துவிடுகிறது. உடனே தலைவிரி கோலத்தோடு வந்து பாப்பாத்தியையும் பழநியப்பனையும் வைகிறாள். மனம் பொறுக்காமல் ஓடிச்சென்று கிணற்றில் குதித்துச் சாகிறாள். பழநியப்பன்மீது கொலைப்பழி விழுகிறது. தூக்குத் தண்டனை கிடைக்கிறது. கடைசி ஆசையாக தான் முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும் என்கிறான். அவன் முகச்சவரம் செய்து திருத்தமாக இருக்க வேண்டும் என்பது பாப்பாத்தியின் ஆசை. தண்டனைக்கு முந்திய நாள் பழநியப்பனைப் பார்க்க வருகிறாள் பாப்பாத்தி. அவளை இன்னொரு திருமணம் செய்துகொள்ளக் கோரும் அவன் சொல்லைக்கேட்டவள் மருது கொடுத்துச் சென்ற துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொள்கிறாள். பாப்பாத்தியின் பிணம் போகிறது. "இன்று நீ... நாளை நான்" என்று சொல்லி முடிக்கிறான் பழநியப்பன். "ஒருத்தி இருக்கும்போது இன்னொருத்தியை நினைக்காதீங்க... அப்படி நினைச்சா உங்களுக்கும் என் கதிதான்," என்பது பழநியப்பனின் இறுதி வாய்ச்சொல்.

    Indru Nee Naalai Naan

    ஒரு திரைப்படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது வாழ்வின் உணர்ச்சித் ததும்பலான ஒரு பகுதிக்குச் சான்றாக விளங்க வேண்டும். அந்தப் பெருஞ்சுழலை நோக்கி எப்படியாவது நகர்த்திச் செல்ல வேண்டும். எனக்கும் உனக்கும் எப்போது வேண்டுமானாலும் நேரக்கூடிய ஒன்று, இக்கதை மாந்தர்க்கு நேர்ந்தது என்பதுதான் அதன் வழியே நாம் பற்றி நிற்கும் பதற்றம். 'இன்று நீ நாளை நான்' என்ற திரைப்படத்தில் நாமடையும் உணர்ச்சிச் செப்பம் அதுதான். கைம்பெண்ணின் பார்வைப் புலத்திலிருந்து கதையை நகர்த்திச் சென்ற துணிச்சலான முயற்சி. துணிச்சலுக்கு எப்போதும் தமிழ் மக்களிடையே வரவேற்பு இருந்திருக்கிறது. அதனால்தான் இப்படம் வெற்றி பெற்றது.

    English summary
    Poet Magudeswaran's sensational write up on 80's calssic Indru Nee Naalai Naan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X