நடிகர் ராணா - மிஹீகா மெஹந்தி விழா.. சமந்தா, நாகார்ஜுனா உட்பட குடும்பம் ஆஜர்.. வைரலாகும் போட்டோ!
ஐதராபாத்: மிஹீகாவின் வீட்டில் நேற்று நடந்த மெஹந்தி விழாவில், நடிகர் ராணாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Recommended Video
நடிகர் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
மிஹீகா தனது காதலை ஏற்றுக் கொண்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசையுடன் அறிவித்திருந்தார், ராணா.

கொரோனா பிரச்னை
ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதையடுத்து இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். கொரோனா பிரச்னை முடிந்த பின் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால், இப்போதைக்கு அது முடிவதாக இல்லை என்பதால் உடனடியாகத் திருமண ஏற்பாட்டை தொடங்கினர். அதன்படி இவர்கள் திருமணம் நாளை நடக்க இருக்கிறது.

இந்தியா முழுவதும்
ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டூடியோவில் இந்த திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா முழுவதும் தீவிரமாகி வருகிறது. ஐதராபாத்திலும் இந்த வைரஸ் கடந்த சில நாட்களாகத் தீவிரம் அடைந்து வருகிறது. பிரபல சினிமா இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, தேஜா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

கட்டுப்பாடுகள்
இதனால் திருமணத்துக்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகத் தகவல் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

அழைக்க முடியவில்லை
இதுபற்றி நடிகர் ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, 'விழாவுக்கு 30 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்கள். இந்த இக்கட்டானச் சூழலில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயாராக இல்லை. அதனால் சினிமா துறையில் உள்ள எனது நெருங்கிய நண்பர்களை கூட அழைக்க முடியவில்லை' என்றார்.

நடிகை சமந்தா
இந்நிலையில், திருமணத்துக்கு முன் நடக்கும் மெஹந்தி விழா, மீஹீகாவின் வீட்டில் நேற்று மாலை நடந்தது. இதில், நடிகர் ராணாவும் அவர் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். நடிகை சமந்தா, அவர் கணவர் நாக சைதன்யா, நடிகர் வெங்கடேஷ், நாகார்ஜூனா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை நடிகர் ராணா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

பிரபுசாலமனின் காடன்
நடிகர் ராணா தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலியின் பாகுபலியில் வில்லனாக மிரட்டியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்போது தமிழில் பிரபுசாலமன் இயக்கியுள்ள காடன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











