ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விதிக்கப்பட்ட அபராதம்.. இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் ஃபேமஸான இசையமைப்பாளர். ஆஸ்கர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விருதுகளை வென்றிருக்கும் அவர் தமிழில் பிஸியாக இசையமைத்துவருகிறார். அடுத்ததாக அவரது இசையமைப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீர என்ற பாடல் காப்புரிமை தொடர்பாக இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 30 வருடங்களுக்கும் மேலாக இசையமைத்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் என அவரது சாம்ராஜ்ஜியம் விரிவானது. தான் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலிலும் ஏதோவொரு புதுமையை புகுத்திவிட வேண்டுமென்பதில் இன்னமும் தீவிர தேடுதலோடு இருக்கிறார். இதன் காரணமாகவே அவரது பாடல்களை ரசிகர்கள் மெய் மறந்து ரசிப்பதுண்டு. கடைசியாக அவர் தமிழில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த படம்: இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஹ்மானை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியது மணிரத்னம்தான். அதேபோல் அவர்கள் இரண்டு பேரும் இணைந்து இதுவரை கொடுத்த பாடல்கள் அனைத்துமே காலங்கடந்து நிற்பவை. சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் சிங்கிளான ஜிங்குச்சா பாடல்கூட அட்டகாசமான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2: இதற்கிடையே கடந்த 2023ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் மணிரத்னம். பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் சுமாரான வரவேற்பையே பெற்றது. ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்கள் மட்டும்தான் நல்ல ரெஸ்பான்ஸை வாங்கின. அதேசமயம் இவர்களுடன் இணைந்து பணியாற்றிய வைரமுத்து அந்தப் படத்தில் பணியாற்றவில்லை. அதனால் பாடல் வரிகள் ஒன்றும் பெரிதாக இல்லை என்ற விமர்சனமும் எழத்தான் செய்தது.
வீர ராஜ வீர: அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் வீர ராஜ வீர. இந்தப் பாடலானது தனது தந்தை இசையமைத்திருந்த சிவா ஸ்துதி என்ற பாடலின் காப்பி என்று ஃபயாஸ் வசிஃபுதின் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ரஹ்மான் பாடலை காப்பி அடித்துவிட்டாரா என்று பலரும் விவாதமாக்கினார்கள். ரஹ்மான் தரப்போ நீதிமன்றத்தில், 'சிவா ஸ்துதி பாடலை காப்பி அடிக்கவில்லை. அந்தப் பாடல் தந்த உந்துதால் அதிலிருந்து வீர ராஜ வீர பாடலை உருவாக்கினோம்' என்று குறிப்பிட்டிருந்தது.
இரண்டு கோடி ரூபாய் அபராதம்: ஆனால் அந்த வழக்கை விசாரித்து ஒரு நீதிபதி கொண்ட அமர்வு, 'வீர ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலின் ஈர்ப்பால் உருவாக்கப்பட்டது போல் தெரியவில்லை. அதே பாடலை சிறிய மாற்றங்களுடன் உருவாக்கியதுபோன்றுதான் தெரிகிறது. எனவே டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் அபராதமாக இரண்டு கோடி ரூபாயை ரஹ்மானும், படத்தை தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் செலுத்த வேண்டும்' என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
அபராதத்துக்கு தடை: நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை கிளப்பிய சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடுக்கு சென்றார். ரஹ்மானின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ரஹ்மானும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை மே 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











