இரவின் நிழல் டீசர் வெளியானது…பார்த்திபன் கனவு நினைவானது
சென்னை : நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் " இரவின் நிழல் ".
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நான்லீனியர் முறையில் சிங்கிள் ஷாட் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் பார்த்திபன்.
இரவின் நிழல் படத்தின் டீசர் சிங்கிள் ஷாட் ஆக ஆரம்பித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

புதுப்புது முயற்சிகள்
பார்த்திபன் சினிமாவில் புதுமைக்கு என்று பெயர் பெற்றவர். அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். அவர் இயக்கிய முதல் படமான புதிய பாதையில் இருந்து கடைசியாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு வரை புதுமைகளை தொடர்ந்து செய்து வருபவர். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படம் பல புதுமைகளை அடக்கி இருக்கிறது. படம் முழுவதும் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்திய அளவில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கும் முதல் படமாக இரவின் நிழல் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
Recommended Video

மெய் பட்ட கனவு
நேற்று இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஒன்றாக மேடையில் அமர்ந்து படத்தை பற்றி உரையாடினர். அப்போது பார்த்திபன் " நான் இருபது வருடங்கள் உங்களுடன் பணியாற்ற முயற்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் உங்களை அணுகும் முயற்சி செய்வேன். ஆனால் ஏதோ காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டு விடும் " என சொல்லி " ஆனால் கடைசியாக இரவின் நிழல் படத்தின் கதையை சொன்னதும் நீங்கள் ஓகே சொல்லிவிட்டீர்கள் எதற்காக ஓகே சொன்னீர்கள் என ஏ ஆர் ரஹ்மான் இடம் கேட்க அவர் அதற்கு பதில் அளித்தார். அதோடு ‘ இந்த படத்தை நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் எடுத்தேன் ‘ என பார்த்திபன் சொல்லி தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய ஒருவராக காணப்பட்டார்.

ஏ ஆர் ரகுமான் சொன்ன பதில்
எதற்காக இந்த படத்திற்கு ஓகே சொன்னீர்கள் என பார்த்திபன் கேட்க ஏ ஆர் ரகுமான் அதற்கு பதிலாக " கதை கேட்டதும் உங்கமேல மரியாதை வந்தது, எல்லாருக்கும் சின்ன வயசுல ஒரு வேட்கை இருக்கும். வயசு ஆக ஆக அது குறைந்து போய்விடும். ஆனால் அது உங்க கிட்ட இன்னும் கொழுந்து விட்டு எரியுது. இந்த ஐடியா முதல்ல கேட்டபோது பைத்தியக்காரத்தனமா இருந்தது. இதை எப்படியாவது எடுப்பீங்க என தெரியும் ஆனா இவ்வளவு நல்லா எடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல " என சொன்னதும் அதற்கு பதிலாக பார்த்திபன் " அது எனக்கே தெரியல " என்று தனதான பாணியில் சொல்ல அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.

டீசர் வெளியீடு
பார்த்திபன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இரவின் நிழல் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டீசர் மயக்கும் ஏ ஆர் ரகுமான் இசையோடு ஆரம்பித்து, ஒரு குரூப் ஃபோட்டோவின் மூலம் நீள்கிறது. சிறுவனாக, இளைஞனாக, நடுத்தர வயது ஆளாக பார்த்திபன் கதாபாத்திரங்கள் ஓடிக்கொண்டிருக்க அவர்கள் மத்தியில் ஊடுருவிச் செல்லும் பார்த்திபன் அதற்கான காரணத்தை சொல்கிறார். ‘ பசியும் பணம் சார்ந்த பிரச்சினைகளும் தான் என்னை எல்லா வயசுலயும் விரட்டிக் கொண்டு இருக்கு " அதைத் தொடர்ந்து சில ஸ்டார்ட்ஸ். முடிவில் கை அருகில் துப்பாக்கியுடன் டீசர் முடிகிறது. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











