தி ஓடிஸி அடல்ட்ஸ்கான படமா? உலகமே எதிர்பார்க்கும் கிறிஸ்டோபர் நோலனின் படத்தின் கதைதான் என்ன? விபரம் இதோ!
சென்னை: ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி ஒடிஸி திரைப்படம் இந்த வாரம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய சினிமா ரசிகர்களிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோலன் படம் என்றாலே இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற சிறப்பு திரையிடலிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் அட்வான்ஸ் புக்கிங்கும் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம் தற்போது தணிக்கை நடைமுறைகளையும் முடித்துள்ளது.
அடல்ட் படம்: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தி ஒடிஸி திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேநேரம் படத்தின் மொத்த ரன்டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் 33 விநாடிகள் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 9ஆம் தேதி தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கதை: இந்த திரைப்படம் ஹோமரின் தி ஒடிஸி காவியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ட்ரோஜன் போர் முடிந்த பிறகு தனது மனைவி, மகன் மற்றும் ராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதற்காக அரசர் ஒடிஸியஸ் மேற்கொள்ளும் நீண்ட பயணம்தான் கதையின் மையம். அந்த பயணத்தில் அவர் சந்திக்கும் ஆபத்துகள், சோதனைகள், புராண உயிரினங்கள், கடவுள்களின் கோபம் என பிரம்மாண்டமான ஃபேண்டஸி உலகத்தை கிறிஸ்டோபர் நோலன் தனது பாணியில் திரையில் கொண்டு வந்திருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படக்குழு: படத்தில் ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் ஒடிஸியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது மனைவி பெனிலோப்பாக ஆன் ஹாத்வே நடித்துள்ளார். இவர்களுடன் டாம் ஹாலண்ட், ராபர்ட் பட்டின்சன், ஜெண்டயா, லுபிடா நியாங்கோ, சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தல், சமந்தா மோர்டன், ஜான் லெகுயிசாமோ, எலியட் பேஜ், பென்னி சாஃப்டி உள்ளிட்ட ஏராளமான முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு: ஓப்பன்ஹைமர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும், பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளம் இணைந்திருப்பதாலும், இந்திய ரசிகர்களிடையே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications