கோச்சடையான் விளம்பரங்களில் புறக்கணிப்பா? ரவிக்குமார் ஆதங்கம்!
சென்னை: கோச்சடையான் பட விளம்பரங்களில் தன் பெயரை சிறியதாகப் போட்டது ஏன் என்று தெரியவில்லை. என்னைப் புறக்கணித்தாலும் கவலையில்லை என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
ராணா படம் கைவிடப்பட்ட நிலையில், ரஜினிக்காக கே எஸ் ரவிக்குமார் உருவாக்கிய இன்னொரு கதைதான் கோச்சடையான்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்க மேற்பார்வை ஆகிய பொறுப்புகள் கேஎஸ் ரவிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. கிட்டத்தட்ட படத்தின் இயக்குநர் அவர்தான்.
ஆனால் இயக்குநர் என்ற முழுப் பொறுப்பும் சௌந்தர்யாவிடம் தரப்பட்டது. காரணம், இதன் தொழில்நுட்பம் அப்படி. முழுக்க முழுக்க மோஷன் கேப்சரிங் என்ற நவீன உத்தியில் உருவாக்கப்பட்டதால், அதுபற்றி நன்கு தெரிந்த சௌந்தர்யாவே இயக்குநரானார்.

வந்தார் மாதேஷ்
ஆனால் படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங் மற்றும் பாடல் பதிவுகள் வரை கேஎஸ் ரவிக்குமார் உடனிருந்தார். அதன் பின்னர் இயக்குநர் மாதேஷ் சில பணிகளுக்காக அழைக்கப்பட்டார். அப்போதிலிருந்து ரவிக்குமாருக்கு முக்கியத்துவம் இல்லை என்பது போன்ற செய்திகள் வர ஆரம்பித்தன. அப்போது ரவிக்குமார், இந்தப் படத்தில் நான் செய்ய வேண்டிய வேலைகள் முடிந்துவிட்டன. புதிதாக யார் வந்தாலும் எனக்கு கவலையில்லை என்று கூறி வந்தார்.

ரஹ்மான் பெயருக்கு அடுத்து..
சில தினங்களுக்கு முன்பு வரை வெளியான அனைத்து விளம்பரங்களிலும் சௌந்தர்யா, ஏஆர் ரஹ்மானுக்கு அடுத்து கே எஸ் ரவிக்குமார் பெயர் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் தனது பெயரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, மாதேஷ் பெயருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக கேஎஸ் ரவிக்குமாரே வார இதழ் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.

என்னைத்தான் இயக்கச் சொன்னார் ரஜினி!
அதில், "ராணா' படத்தை எடுக்க முடியாத சூழ்நிலையில் ரஜினி சாருக்காக நான் எழுதிக் கொடுத்த கதைதான் ‘கோச்சடையான்'. அந்தப் படத்தை என்னை தான் முதலில் ரஜினி சார் டைரக்ட் செய்யச் சொன்னார். ஆனால் படத்தில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருந்ததால், அதில் திறமை வாய்ந்த அவரின் மகள் சௌந்தர்யாவே டைரக்ஷன் செய்யட்டும் என்று தான் பெருந்தன்மையுடன் சொன்னேன்.

லண்டன் ஷூட்டிங்
இதனால் படத்தின் மேற்பார்வையை மட்டுமே கவனித்து வந்த நான் லண்டன் போன்ற இடங்களுக்கும் ஷுட்டிங்குக்காகச் சென்று வந்தேன், பிறகு டப்பிங் வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன்.

பெயரைச் சின்னதாக்கிட்டாங்களே
ஆனால், இப்போது சௌந்தர்யாவுக்கு சமமாக எனது பெயரை போடாமல், மாதேஷ் என்பவரின் பெயர் ‘டைரக்ஷன் மேற்பார்வை' என விளம்பரங்களில் போட்டிருக்கிறார்கள். என்னுடைய பெயரை ஏன் அவ்வளவு சிறிதாக போட்டார்கள் என தெரியவில்லை.

புறக்கணிப்பா...
உண்மையை யாராலும் மறைக்க முடியாது. ஒருவேளை கோச்சடையானிலிருந்து என்னை புறக்கணித்தார்களா? என்பதும் எனக்கு தெரியாது. அப்படியே அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதைப்பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை.

ஆண்டவன் கையில்
கோச்சடையான் படத்தின் மூலம் தான் எனக்கு புதுசாக பெயர் வந்து விடப் போவதுமில்லை. என்னை யாரும் அழிக்க முடியாது. நான் வளர்வதும் தேய்வதும் ஆண்டவன் கையில் இருக்கிறது," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











