டெனெட் படம் காப்பியல்ல.. டிரைலர் வந்தா வேற படத்தோட காப்பின்னு சொல்வீங்க.. வெங்கட் பிரபு ரகளை!
சென்னை: சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள், அந்த படம் டெனெட் படத்தின் காப்பி என ஏகப்பட்ட மீம்களை கொட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், அந்த விமர்சனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு செம ரகளையாக ஒரு ட்வீட் போட்டு இருப்பது வைரலாகி வருகிறது.
டிரைலர் வந்தா வேற ஒரு படத்தோட காப்பின்னு கூட சொல்வீங்கன்னு ட்வீட் போட்டுள்ளார்.

ஸ்லிம் சிம்பு
தனது உடல் எடையை டோட்டலாக மாற்றி ஸ்லிம் சிம்புவாக ஈஸ்வரன், மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து பிசியான நடிகராக நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.

மாநாடு டீசர்
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி மதியம் 2:34 மணிக்கு மாநாடு டீசர் வெளியானது. அரசியல் படத்தின் டீசர் போல கரை வேட்டிகள் சூழ சிம்பு நடந்து வருவார் என பார்த்தால் காலத்தை கட்டுப்படுத்தும் காலனாக மாறி அதகளம் செய்வதும், ஒட்டுமொத்த டீசரும் ரீவைண்டிலேயே இடம்பெற்று இருந்ததையும் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

டெனெட் காப்பி
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தின் காப்பி தான் மாநாடு என்கிற முடிவுக்கே வந்த நெட்டிசன்கள், லோ பட்ஜெட் டெனெட் என்றும், வெங்கட் பிரபுவுக்கு காப்பி அடிப்பதே பொழப்பு என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் மீம்களையும் கொட்டித் தீர்த்தனர்.

வெங்கட் பிரபு ரகளை
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காப்பி விமர்சனத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபுவே அட்டகாசமான ஒரு பதிலை தனது பாணியில் கூறியுள்ளார். டெனெட் படத்துடன் தங்கள் படத்தை கம்பேர் பண்ணதுக்கு ரொம்ப நன்றி. ஆனால், இந்த படம் டெனெட் படத்தின் காப்பி அல்ல என்றார்.

வேற ஒரு படம்
சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் வந்தால், நிச்சயம் நெட்டிசன்களின் கருத்து மாறிவிடும் என்று கூறிய வெங்கட் பிரபு, அப்போ, அது வேற ஒரு படத்தின் காப்பி என்று கமெண்ட் செய்வார்கள் என்றும் வேற லெவலில் ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு டிரைலர் எப்போ வரும் என்கிற எதிர்பார்ப்பையும் எகிற விட்டுள்ளார்.

செம பிசி
மாநாடு படத்திற்கு முன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆந்தாலஜி திரைப்படமான குட்டி ஸ்டோரி வரும் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகிறது. மேலும், காஜல் அகர்வால் லீடு ரோலில் நடிக்கும் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











