மெர்சல்... முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன் சாதனையா?
தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் சாதனைப் படைத்தது 'கபாலி' படம்தான். அந்தப் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 22 கோடி, தமிழ் நாட்டில் மட்டும்.
உலக அளவில் ரூ 100 கோடியை முதல் நாளே தாண்டிய படம் அது.

அஜித்குமார் நடித்து வெளிவந்த 'விவேகம்' படம் அந்த சாதனையை முறியடிக்கும் என்று சொன்னார்கள். ஆனால், 'விவேகம்' படம் சுமார் ரூ 16 கோடி மட்டுமே முதல் நாள் வசூலித்தது, தமிழகத்தில்.
இப்போது விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகியுள்ளதால் இந்தப் படம் கபாலி, விவேகம் படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபீசில் எழுந்தது.

'மெர்சல்' படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 650 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இது கபாலி, விவேகம் படங்களை காட்டிலும் அதிகம்.
தீபாவளி என்றாலே மக்களின் முதல் பொழுதுபோக்கு செலவு சினிமா. மெர்சல் படம் வருமா வராதா என்ற விவாதம் கடந்த ஒரு வார காலமாக தமிழக ஊடகங்களில் விவாதப் பொருளாக இருந்தது.
தமிழக மக்களின் கவனத்தை மெர்சல் பக்கம் திருப்பி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கும் ஆவலை எல்லோருக்கும் ஏற்படுத்தியது.

தீபாவளி அன்று ரஜினிகாந்த் படங்களுக்கு இணையாக மெர்சல் படத்துக்கு ஓபனிங் இருந்ததுடன் வசூல் அபரிமிதமாக, அனைத்து தியேட்டர்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே தொடங்கியது.
குறைந்த பட்சம் 100 ரூபாயில் தொடங்கி 1000 ம் ரூபாய் வரை மெர்சல் பட டிக்கட் விற்பனை செய்யப்பட்டது.
முதல் நாள் மெர்சல் படம் டிக்கட் விற்பனை மூலம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன் ரூ 20 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
கபாலி, விவேகம் இரு படங்களும் சாதாரண நாட்களில் வெளியாகின. போட்டிக்கு வேறு முண்ணனி நடிகர்கள் படங்கள் ரீலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சூழல்தான் மெர்சல் படத்துக்கும் இருந்தது என்றாலும் தீபாவளி பண்டிகை என்பது கூடுதல் பலம் என்பதுடன் அதிக தியேட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரஜினிகாந்த், அஜித்குமார் படங்களின் முதல் நாள் வசூல் கணக்குடன் மெர்சல் கலெக்க்ஷனை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.
ஆனாலும், விஜய்யின் கேரியரில் இதுதான் மிகப் பெரிய ஓபனிங் வசூல் என்பதில் எந்த மிகையும் இல்லை!
- ஏகலைவன்


Click it and Unblock the Notifications











