ஜெய்பீம் படத்தில் ரஜிஷா விஜயன் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளாரா?
சென்னை : மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன்.
ஜூன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
கர்ணனில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமாவில் இளம் நடிகையாக
சமீபத்திய தமிழ் வரவாக பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்பொழுது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஜூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரஜிஷா இப்போது மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

தனுஷுக்கு இணையாக நடித்து
இந்த நிலையில் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு இணையாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் சென்டிமெண்ட் காட்சிகளிலும் ரஜிஷா விஜயன் இதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

பெண்ணின் அப்பாவி கணவரை
கர்ணன் படத்திற்கு பிறகு ரஜிஷா விஜயனுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க இப்பொழுது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் , மலைவாழ் பெண்ணின் அப்பாவி கணவரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கூட்டிச் சென்று கொல்லப்பட்டதையும் பற்றிய படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படமும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பழங்குடியின பெண்ணாக ரஜிஷா
இந்த நிலையில் இதில் நடிகர் சூர்யா அட்வகேட் சந்துருவாக நடித்துள்ளார். சூர்யா வழக்கறிஞராக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் ரஜிஷாவின் கதாபாத்திரம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இப்படத்தில் பழங்குடியின பெண்ணாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தியின் சர்க்கார் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கிலும் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் திரைப் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் .


Click it and Unblock the Notifications











