சூப்பர் ஸ்டார் பட்டம் பறிபோகிறதா?.. பதறுகிறாரா ரஜினிகாந்த்?
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை வைத்து அவர் ஒருவேளை பதற்றமடைந்திருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்ற பேச்சு பல வருடங்களாக இருக்கிறது. அதற்கேற்றபடிதான வரும் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்; படங்களும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டிக்கொண்டிருந்தன. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பாரும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படமும் படுதோல்வியை சந்தித்தன. அண்ணாத்த படத்துக்காக அவர் சிவாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்தாலும் படம் ஃப்ளாப் என்பதுதான் உண்மை.

ஆட்டம் கண்ட நாற்காலி?: தர்பாரில் விட்டதை அண்ணாத்த படத்தில் பிடித்துவிடலாம் என அவர் கணக்கு போட அந்த கணக்கு பொய்த்துப்போனது. இரண்டு படங்களுமே போதிய வசூலை பெறவில்லை. அதேசமயம் மறுபக்கம் விஜய்யின் படங்களோ வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவருவதாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் ஜரூராக நடக்கிறது. இதன் காரணமாக விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. எனவே ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக திரை ஆர்வலர்கள் கூறினர்.
பாடல் வரிகள்: இந்த விவகாரம் விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றது ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகள். அதில் இடம்பெற்ற, 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா; தலைமுறை கடந்து ஹிட்டானவன்; பேரை தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு குட்டிச்செவுத்தை எட்டிப்பார்த்தா உசர கொடுக்க கோடி பேரு; உன் அலும்ப பார்த்தவன் உங்கொப்பன் விசில கேட்டவன் உன் மவன் பேரன ஆட்டம் போட வைப்பவன்' வரிகள் முழுக்க முழுக்க விஜய்யை தாக்கி எழுதியதாகவே கருதப்பட்டது.
அதேபோல் அடுத்து வெளியான ஜுஜுபி என்ற பாடலில், களவாணி கண்ணையா காளைக்கு கொம்ப சீவிப்புட்ட அது முட்டி கிழிச்சு வீசாமத்தான் விடுமா உன்னைய என ஆரம்ப வரியே அடுத்த விவாதத்தை கிளப்பியது. அதாவது களவாணி கண்ணையா என விஜய்யைத்தான் சொல்கிறார்கள் என்ற பேச்சு எழுந்தது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்தது.
ரஜினி பேச்சு: நிலைமை இப்படி இருக்க ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ காக்கா, கழுகு கதையை சொல்லி அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சை கொண்டு வந்தது எரியும் தீயில் எண்னெய்யை ஊற்றியது போல் ஆகிவிட்டது. காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார் என அவரது ரசிகர்கள் ஒருபக்கம் களத்தில் குதிக்க; லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கு விஜய் பதிலடி கொடுப்பார் என மறுபக்கம் விஜய் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இப்படி செய்யலாமா: இந்நிலையில் மேற்கூறிய பாடல் வரிகளை அனுமதித்தும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அப்படி பேசியதையும் வைத்து ரசிகர்கல் பல கேள்விகளை எழுப்பி கருத்துக்களை கூறிவருகின்றனர். அதாவது ரஜினிக்கு இப்போது 72 வயது ஆகிறது. அவர் உண்மையிலேயே மிகச்சிறந்த நடிகர்தான். சூப்பர் ஸ்டார் என்றாலே அவர்தான் முதலில் நினைவுக்கு வருவார். ஆனால் ரஜினி இந்த விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
கமல் ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற ரஜினியின் சமகால நடிகர்கள் பட்டம் என்பதை தாண்டி கலை, கதைக்கு முக்கியத்துவம் என்ற ஜானருக்குள் சென்றுவிட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த்தோ தனக்கு ரொம்பவே ஜூனியரான விஜய்யுடன் மல்லுக்கு நிற்பது ரசிக்கும்படி இல்லை. குறிப்பாக மேடையில் அவர் ஹூக்கும் பாடல் குறித்து பேசும்போது சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை வேண்டாம் என்று சொன்னேன் என கூறியிருக்கிறார்.
ஆனால் பாடல் எழுதிய சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டவும் செய்திருக்கிறார். உண்மையில் இந்த சண்டை எழுந்திருக்கக்கூடாது என்றால் ரஜினி அந்த வார்த்தையை பாடலில் இடம்பெற செய்திருக்க கூடாது அல்லது மேடையில் அப்படி பேசியிருக்கக்கூடாது.
அதையெல்லாம் தாண்டி ரஜினியை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். ஏன் தனது தந்தையிடம் அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி காண்பித்துதான் சினிமாவில் நடிப்பதற்கான அனுமதியை பெற்றார். அதன் பிறகு விஜய் தனது திறமையை வளர்த்து இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். சூழல் இப்படி இருக்க இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் பக்குவமாக அணுகியிருக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் வார்த்தை பாடலில் இடம்பெற்றது, விவாதத்தை கிளப்பும் வரிகளை எழுதிய பாடலாசிரியருக்கு பாராட்டு தெரிவித்தது, காக்கா கழுகு கதை மூலம் விஜய்யை குத்தி காண்பித்தது இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தன்னிடம் இருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் பறிபோகிறதோ என்ற பதற்றத்தில் ரஜினி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக ரசிகர்களில் ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.
கம்பேக் கொடுங்கள் ரஜினி: சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கௌரவத்துக்கும், வியாபாரத்திற்கும் வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் சிறந்த நடிகர் பக்குவமான மனிதர் என்பதுதான் காலங்கடந்து ஒருவரின் பெயர் நிலைத்து நிற்க பயன்படும். ஏனெனில் ரஜினிகாந்த் சினிமாவில் பல தலைமுறைகளை பார்த்தவர்.
எனவே அவர் கதையில் கவனம் செலுத்தி மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருடனேயே இருக்கப்போகிறது. அதைவிட்டுவிட்டு தேவையில்லாமல் பதற்றப்பட்டு எதை எதையோ பேசி பல சச்சரவுகள் உருவாக காரணமாக ரஜினி இருக்கக்கூடாது. அது ஒரு மூத்த கலைஞருக்கு உகந்தது அல்ல என்கின்றனர் ரசிகர்களில் ஒருதரப்பினர்.


Click it and Unblock the Notifications











