உடன் நடித்தவருடன் திடீர் காதல்.. இதற்காகத்தான் விவாகரத்து செய்தாரா பிரபல சின்னத்திரை ஹீரோயின்?
சென்னை: திடீரென விவாகரத்து செய்துகொண்ட சின்னத்திரை நடிகை, தன்னுடன் நடித்த டிவி நடிகரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இது இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்.

அவளும் நானும்
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' என்ற தொடரில் ரோகிணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரும் நன்றாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவளும் நானும் என்ற தொடரிலும் நடித்தார். இதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

கயல் படத்தில்
சில மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்த கயல் படத்திலும் நடித்திருந்தார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸூம் சின்னத்திரை நடிகை.

திருமணம்
மேக்னா - டான் டோமி, டிம்பிள் - ஆன்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் ஒரே நாளில் திருச்சூரியில் நடந்தது. டிம்பிள் திருமணம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. மேக்னா- டான் டோமி திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

விவாகரத்து
இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். பிரபல டிவி நடிகை ஒருவர் விவாகரத்து செய்துள்ள செய்தி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நடிகருடன் மறுமணம்
இதையடுத்து டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதே போல மேக்னாவும் மறுமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 'பொன்மகள் வந்தாள்' தொடரில் மேக்னாவுடன் நடித்த விக்கி கிரீஷ் என்பவரை அவர் காதலித்து வருவதாகவும் அவரை மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











