STR: சொன்ன வார்த்தையை மீறிய சிம்பு.. கடுப்பான தயாரிப்பாளர்.. அடுத்த படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
சென்னை: நடிகர் சிம்பு அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு புதிய பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இன்னொரு தயாரிப்பாளர் அந்த படத்துக்கு செக் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிம்பு படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், கமல் தயாரிக்கும் படமாவது சுமூகமாக ஆரம்பித்து முடியும் என்று நினைத்துக் கொண்ட ரசிகர்களுக்கு செம ஷாக்கிங்காக இப்படியொரு பிரச்சனை முளைத்திருக்கிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி தனது அடுத்த படத்தை பல தடைகளுக்கு பிறகு ஆரம்பித்துள்ள நிலையில், மறுபடியும் ஒரு பிரச்சனையா? என அப்செட் ஆகி உள்ளாராம்.
சிம்பு படத்துக்கு சிக்கல்: தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிக்க உள்ள வரலாற்று தொடர்பு கொண்ட படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாவீரனாக சிம்பு நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.
அந்த படத்திற்காக வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருகிறார் சிம்பு. இந்நிலையில், அந்த படத்துக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வார்த்தை தவறிய சிம்பு: நடிகர் சிம்பு வைத்து ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து சாகசம் செய்தார். மேலும், படத்தின் இயக்குநர் கவுதம் மேனனுக்கு புல்லட் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் உள்ளிட்ட 3 படங்களில் சிம்பு வேல்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணப் போவதாக ஒப்பந்தம் போட்ட நிலையில், பத்து தல, கமல் படம் என வேல்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கை அவர் மீறியதாக தற்போது புகாருடன் தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் முறையிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஐசரி கணேஷ் ஆத்திரம்: நடிகர் சிம்புவுக்கு இக்கட்டான சூழ்நிலை இருக்கும் போது களமிறங்கி அவரது பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் ஐசரி கணேஷ். சிம்புவுக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வழங்கி கவுரவித்தார்.

ஆனால், தற்போது ஒத்துக் கொண்ட 3 படங்களில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விட்டாரே என்கிற புகாரை ஐசரி கணேஷ் கொண்டு சென்றுள்ள நிலையில், நடிகர் சிம்பு மீது இதுதொடர்பான நடவடிக்கை பாய்ந்தால் அவர் மீண்டும் நடிப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே மைக்கேல் ராயப்பன் கொண்டு சென்ற புகார் காரணமாகத்தான் சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை படத்தை கமல் தயாரிக்க உள்ளதால் ஐசரி கணேஷ் உடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வு எட்டப்படும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











