சிம்புவை நடிக்கவே கூடாதுன்னு சொல்லல?.. பிடி சார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!
சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்த நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதிகமாக செலவு செய்து அந்த படத்தை ஐசரி கணேஷ் எடுத்திருந்தார்.
மேலும், வேல்ஸ் நிறுவனத்துக்கு மூன்று படங்களை நடித்து தருவதாக சிம்பு உறுதி அளித்ததாகவும் கொரோனா குமார் படத்திலிருந்து சிம்பு நடிக்க முடியாது என விலகியது பஞ்சாயத்தை ஏற்படுத்திய நிலையில் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அவர் நடிக்கவே கூடாது என்றும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், நேற்று நடைபெற்ற பிடி சார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
பிடி சார் டிரைலர் வெளியீட்டு விழா: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய பிளாக் ஷீப் யூடியூப் சேனலை சேர்ந்த இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பிடி சார் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். மேலும், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபு, தியாகராஜன், பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த திரைப்படம் அடுத்த வாரம் மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிம்புவுக்கு ரெட் கார்டு?: ஏற்கனவே நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்ட நிலையில், "எனக்கா ரெட் கார்டு எடுத்துப்பார் ரெக்கார்டு" என வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்காக பாடலை எல்லாம் பாடி நடனம் ஆடினாலும் அந்த படம் ஓடவில்லை. உடல் எடையை குறைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என நினைத்த சிம்பு மாநாடு படத்திற்காக வெயிட் லாஸ் செய்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து மாஸ் காட்டினார். ஆனால் அதன் பின்னர், அதைவிட உடல் மெலிந்து நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிப் பெறவில்லை. கொரோனா குமார் படத்தில் நடிக்க முடியாது என சிம்பு மறுத்த நிலையில் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் சார்பில் முறையிட்டதாக தகவல்கள் வெளியாகின.
என் படத்தை முடிச்சு குடுத்துட்டு: இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிடி சார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ் சிம்பு பொருத்தக் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். நடிகர் சிம்பு நடிக்கவே கூடாது என தான் கூறவில்லை என்றும் தனது படத்தை முடித்து கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடிக்கட்டும் என்று தான் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்பு இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்னதாக தற்போது மணிரத்னம் இயக்கத்தின் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பையே விரைவில் மணிரத்தினம் முடித்துவிடுவார் போல தெரிகிறது. இந்நிலையில், சிம்புவுக்கு எதிரான பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்த்து விடும் ஆலோசனைகள் இருப்பதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications