கேப்டன் மில்லருக்கு அடுத்த படம்.. தனுஷுடன் இணைகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
சென்னை: கேப்டன் மில்லர் படத்தை முடித்த பிறகு தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார்.

வாத்தி தனுஷ்
தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருந்தது. இதன் மூலம் இத்தனை வருடங்கள் தெலுங்கில் அறிமுகமாகாமல் இருந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். இருப்பினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.

கேப்டன் மில்லரில் தனுஷ்
வாத்தி படத்துக்கு பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தனுஷின் 50ஆவது படம் சன்பிக்சர்ஸ் அறிவிப்பு
இதற்கிடையே தனுஷுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருக்கிறது. ஏற்கனவே படிக்காதவன், உத்தமபுத்திரன் ஆகிய படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம் தனுஷுக்கு 50ஆவது படமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை தனுஷே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குநராகவும் வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 50ஆவது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தப் படத்துக்கு ராயன் என்று பெயரிடப்படும் என்றும் சென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகும் என்றும் யூகங்கள் வெளியாகிவருகின்றன. மேலும் இதில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா உள்ளிட்டோர் நடிக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











