10 ஆண்டுகளுக்கு பின் பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிய மெக்ஸிகோ பெண்.. கனவு நனவானதாக ஆனந்த கண்ணீர்!
சென்னை: பிரபஞ்ச பழகி பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நனவாகி இருப்பதாக பிரபஞ்ச அழகியான ஆண்ட்ரியா மெஸா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
69வது பிரபஞ்ச அழகிக்கான போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மகாணத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்றது.

பிரபஞ்ச அழகியாக..
இதில் 73 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில் மெக்ஸிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற தென் ஆப்பிரிக்காவின் ஸோஸிபினி துன்ஸி மகுடம் சூட்டினார்.

இந்திய அழகி
இந்த பிரபஞ்ச அழகிப்போட்டியில் பிரேஸிலின் ஜூலியா காமா இரண்டாவது இடத்தை பிடித்தார். பெரு நாட்டின், ஜானிக் மெஸிட்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்திய அழகியான அட்லின் கேஸ்டிலினோவுக்கு 4வது இடம் கிடைத்தது.

கனவு நனவாகிவிட்டது
பிரபஞ்ச அழகியாக மகுடத்தை சூடிக்கொண்ட கையோடு பேசிய ஆண்ட்ரியா மெஸா, 73 அற்புதமான பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பிரபஞ்ச அழகி மகுடத்தை சூட வேண்டும் என்ற என் கனவு நனவாகிவிட்டது என ஆனந்த கண்ணீர் விட்டார் ஆண்ட்ரியா மெஸா.

10 ஆண்டுகளுக்கு பிறகு
மேலும் வரவிருக்கும் ஆண்டிலும் அதற்கு பிறகும் சமத்துவத்திற்கான எனது வாதத்தின் மூலம் இந்த உலகுக்கு சேவை செய்வேன் என்று நம்புகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம் மெக்ஸிகோ பத்தாண்டுகளுக்கு பிறகு அழகி பட்டத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











