Jigarthanda 2 - ஜிகர்தண்டா 2 பார்க்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.. என்ன சொல்வாரோ?.. கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சி
சென்னை: Jigarthanda Double X (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) ஜிகர்தண்டா 2 படத்தை ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் பார்க்கவிருக்கிறார் என்று உறுதியாகியிருக்கிறது.
பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தனது தனித்துவமான மேக்கிங்கின் மூலம் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறார். அவர் இதுவரை இயக்கிய அத்தனை படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கின்றன. அவரது இயக்கத்தில் கடைசியாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தீபாவளி ரேஸில் படம் களமிறங்கி வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
செம மேக்கிங்: படத்தை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் தரமான மேக்கிங் செய்திருக்கிறார். குறிப்பாக பழங்குடி இன மக்களின் வலியையும் யானைகளையும் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும் சூப்பராக கனெக்ட் செய்திருக்கிறார் என்று சிலாகித்துவருகின்றனர். படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் வெகுவாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிளிண்ட் ஈஸ்ட்வுட்: படத்தின் மற்றொரு ஹைலைட்டாக இருந்தது ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை பயன்படுத்தியது. அதாவது மதுரைக்கு ஷூட்டிங் வரும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் அல்லியஸிடம் (லாரன்ஸ்) ஒரு கேமராவை கொடுத்து சென்றது போலவும் அதை வைத்து எஸ்.ஜே.சூர்யா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஷூட்டிங் செய்வது போன்றும் காட்சிகள் இருந்தன.
அதிலும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்று மக்களை காக்க வேண்டும் என லாரன்ஸிடம் எஸ்.ஜே.சூர்யா பேசுவது போன்றும் படத்தில் இருக்கும். ஈஸ்ட்வுட்டின் இள வயது தோற்றத்தை கிராஃபிக்ஸ் மூலம் படக்குழுவினர் கொண்டு வந்திருந்தனர். இது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ் படம் உருவாகியிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸில் படம் ஸ்ட்ரீம் ஆகிறது. படம் முழுக்க உங்களது பங்களிப்பு காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது படத்தை பாருங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து, "கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தை பற்றி அறிந்திருக்கிறார். இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ஜுரர் 2 படத்தை முடித்துவிட்டு ஜிகர்தண்டா 2 படத்தை பார்ப்பார்" என பதில் வந்திருந்தது.
இந்நிலையில் இதனை கவனித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "இதை என்னால் நம்பமுடியவில்லை. பார்த்தை பார்த்துவிட்டு லெஜெண்ட் ஈஸ்ட்வுட் கூறப்போகும் கருத்துக்களுக்காக காத்திருக்க முடியவில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்தியவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











