தம்பியை தொடர்ந்து அண்ணனுடன் கூட்டணி வைக்கும் விருமன் இயக்குநர்: சூர்யா ரசிகர்களுக்கு சம்பவம் ரெடி
சென்னை: கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'விருமன்' படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
Recommended Video
முத்தையா இயக்கிய விருமன் படத்தை சூர்யா தனது 2 டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
விருமன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், சூர்யா - முத்தையா கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொம்பன் டூ விருமன்
'பருத்தி வீரன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக்கு, கிராமத்து கெட்டப் திரைப்படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. கிட்டத்தட்ட அதே லுக்கில் வெளியான 'கொம்பன்' படம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை முத்தையா இயக்கியிருந்தார். இவரும் கிராமத்து பின்னணிக் கொண்ட படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர். இந்நிலையில், கொம்பன் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி, முத்தையா கூட்டணி விருமன் படத்தில் மீண்டும் இணைந்தது.

சூர்யா தயாரிப்பில் விருமன்
'விருமன்' திரைப்படமும் கிராமத்து பின்னணியில் உருவானதால், பயங்கர எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதுவும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி ஹீரோ, ஹீரோயினாக அதிதி ஷங்கர் அறிமுகம், யுவன் இசை என, 'விருமன்' படம் ரிலீஸுக்கு முன்பே களைக்கட்டியது. அதேபோல், படம் வெளியான பின்னரும் தரமான சம்பவம் செய்தது. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் கோடிகளை குவித்தது.

உற்சாகத்தில் சூர்யா, கார்த்தி
'விருமன்' படத்தின் வெற்றியால் சூர்யாவும் கார்த்தியும் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர். இந்த மகிழ்ச்சியை விருமன் படக்குழுவினரோடு கொண்டாடிய சூர்யா, கார்த்தி, திரையரங்குகள் சென்று ரசிகர்களையும் குஷிப்படுத்தினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 'விருமன்' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இதனால், மீண்டும் இயக்குநர் முத்தையாவுடன் கூட்டணி வைக்க சூர்யா முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
பாலா இயக்கத்தில் வணங்கான், சிவா இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என, அடுத்தடுத்து பிசியாக இருக்கிறார் சூர்யா. இதனிடையே முத்தையா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவும் முத்தையாவின் வழக்கமான கிராமத்துப் பின்னணி படமாக இருக்கும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கும் கிராமத்து கெட்டப்பில் நடிக்க ஆர்வம் உள்ளதால், விரைவில் இந்தக் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











