Ethirneechal - ஓவர் பந்தா காட்டும் வேல ராமமூர்த்தி?.. அடுத்த ஆதிகுணசேகரன் யார்?.. மும்முரமாகும் பேச்சுவார்த்தை
சென்னை: Ethirneechal (எதிர்நீச்சல்) எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக நடிக்க ஒத்துக்கொள்வதற்கு வேலராமமூர்த்தி இழுத்தடிப்பதால் வேறு சிலரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நடிகராக களமிறங்கினார் அவர். அதன்படி யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல படங்களில் நடித்தார். கமல் ஹாசன் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் என தொடர்ந்து படங்களில் நடித்தார். அவரது எதார்த்தமான உடல்மொழியும், வாய் மொழியும் ரசிக்கும்படியே இருந்தது
எதிர்நீச்சல்: பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கினார் மாரிமுத்து. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்களிலும் ஏகத்துக்கும் அவரை கொண்டாடினார்.
மரணம்: இந்தச் சூழலில் கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். கடந்த எட்டாம் தேதி காலையில் வளசரவாகத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோவில் சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. உடனே தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்த ஆதிகுணசேகரன் யார்?: மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து அடுத்த ஆதிகுணசேகரனாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அவர் கூறினார்.
ஓவர் பந்தா?: இந்தச் சூழலில் வேல ராமமூர்த்தியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் இதுவரை ஒத்துக்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்நீச்சல் குழு வேறு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மூத்த நடிகர் ராதாரவி மற்றும் பசுபதி உள்ளிட்டோரிடம் ஆதிகுணசேகரனாக நடிக்கும்படி அப்ரோச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











