1831 கோடி வசூல்.. புஷ்பா 2 இயக்குநர் வீட்டிலும் ஐடி ரெய்டு.. விமான நிலையத்தில் இருந்து வந்த சுகுமார்
ஹைதராபாத்: தெலங்கானாவில் திடீரென சினிமா பிரபலங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரின் வீடுகளில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இயக்குநரும் இணை தயாரிப்பாளருமான சுகுமார் வீட்டிலும் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 1831 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியான நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் சோதனையிடப்பட்டுள்ளதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளே 186 கோடி ரூபாய் வசூல் என போஸ்டர் வெளியானது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவரது மனைவி தேஜஸ்வினியின் வங்கி லாக்கர்களையும் சோதனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகுமார் வீட்டிலும் ஐடி ரெய்டு: தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி வரும் நிலையில், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 2 படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்த சுகுமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. புஷ்பா 2 திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூலையும் மிஞ்சிவிட்டதாக போஸ்டர்கள் வெளியாகி வந்த நிலையில், அதுதொடர்பான கணக்குகளை சரிபார்க்க இந்த ரெய்டு நடக்கிறதா? அல்லது என்ன காரணம் என்பது குறித்து இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சுகுமார்: புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார் விமான நிலையத்தில் இருந்த நிலையில், அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து அப்படியே வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு சினிமாவில் திடீரென வெளியாகும் படங்களின் வசூல் கணக்கெல்லாம் பாலிவுட் படங்களின் வசூலையே மிஞ்சி வரும் நிலையில், வருமான வரித்துறையினர் இந்த அதிரடி சோதனையை நடத்துகின்றனரா அல்லது இது பழிவாங்கும் முயற்சியா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
அல்லு அர்ஜுனுக்கு துணையாக: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு துணையாக தில் ராஜு, சுகுமார் உள்ளிட்டோர் அவர் கைது செய்யப்பட்டபோது கூடவே இருந்த நிலையில், அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், சங்கராந்தி வஸ்துனாம் படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தில் ராஜுவை டார்கெட் செய்து ஐடி ரெய்டுகள் அரங்கேறி வந்த நிலையில், அடுத்து புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமாரும் விசாரணை வலையில் சிக்கியிருக்கிறார். மேலும், டோலிவுட் சினிமா துறையில் யாரெல்லாம் சிக்கப் போகின்றனர் என்கிற கேள்விகளும் விசாரணைக்குப் பிறகு என்ன ஆகும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











