ஷூட்டிங் ஓவர்.. 'விஜய் ஆண்டனி, அக்ஷராவை பார்த்து அசந்துபோனேன்..' நெகிழும் இயக்குனர் நவீன்!
சென்னை: அருண் விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.
'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இயக்கும் படம், அக்னிச் சிறகுகள்.
இதில், அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

வெளிநாடுகளில் கதை
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஏராளமான பொருட் செலவில் தயாரிக்கிறார். படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் கதை வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் இது.

கொண்டாடிய செல்ஃபி
இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வந்தது. இதில், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், ரைமா சென் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதன் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அக்னிச் சிறகுகள் படக்குழு கொல்கத்தாவில் எடுத்துள்ள செல்ஃபி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெருக்கடியான சூழல்
இதுபற்றி இயக்குனர் நவீன் கூறியதாவது: உலகம் முழுதுமே படப்பிடிப்பு நடத்துவது தற்போது நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக்குழுவின் அயராத ஒத்துழைப்பின் மூலம் இப்போது ஷூட்டிங்கை முடித்துள்ளோம். படத்தின் முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் படமாக்கினோம்.

அசந்தே போனேன்
இத்துடன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் வெளிப்படுத்திய நடிப்பில் அசந்து போனேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் பேரனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் துவக்கப்பட்டுள்ளது.

வேறுவித அனுபவம்
பெரும் பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான பல லொகேஷன்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. பரபர திரில்லராக, பல அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் படம் படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வேறுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications











