தேன் குரலாள் சுசீலா அம்மாவுக்கு இன்று பிறந்தநாள்
சென்னை: பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு ரசிகர்களை தனது தேன் குரலில் மயங்கச் செய்த பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தை தனது இசை மழையால் நனைத்த அவரின் பிறந்தநாள் அன்று அவர் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

விஜயநகரம்
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 13.11.1935 அன்று பிறந்தவர் பி. சுசீலா. அவரது தந்தை பிரபல வழக்கறிஞர் முகுந்தராவ். இளம் வயதில் இருந்தே சுசீலாவுக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மகாராஜா இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை படிப்பில் டிப்ளமோ முடித்தார்.

சென்னை வானொலி
1950ம் ஆண்டு சுசீலா சென்னை வானொலியில் நிலைய பாடகியாக சேர்ந்தார். பாப்பாமலர் என்ற நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு பெற்றதாய் என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தவர் இசை அமைப்பாளர் கே.எஸ்.பிரகாஷ்ராவ். 1953ம் ஆண்டு பெற்றதாய் படத்தில் எதற்கு அழைத்தாய் என்ற பாடலை அவர் ஏ.எம். ராஜாவுடன் சேர்ந்து பாடினார்.

டி.எம்.எஸ்.- பி. சுசீலா
பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனும், பி.சுசூலாவும் சேர்ந்து ஏராளமான படங்களுக்கு ஜோடியாக பாடியுள்ளனர். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்களை கிறங்க வைத்தன.

தேசிய விருது
உயர்ந்த மனிதன் படத்தில் சுசீலா பாடிய "நாளை இந்த வேளை பார்த்து" என்ற பாடல் மற்றும் சவாலே சமாளி படத்திற்காக அவர் பாடிய "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு" ஆகிய பாடல்களுக்கு அவருக்கு 2 முறை தேசிய விருது கிடைத்தது. இது தவிர தெலுங்கு படங்களுக்காகவும் அவர் 3 முறை தேசிய விருதுகளை பெற்றார். மேலும் அவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

அறக்கட்டளை
சுசீலா கடந்த 2008ம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி சாதனை படைக்கும் இசை கலைஞர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்.

இன்றும் இளமை
25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள சுசீலா இன்றும் இளமையாக காட்சி அளிக்கிறார். அவர் திரை இசைப் பாடல்கள் தவிர ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











