அவரை விட்டு விலக தயார்.. ஏன் வேலை செய்ய வேண்டும்.. ஜானி மாஸ்டர் மனைவி அதிரடி
ஹைதராபாத்: பிரபலமான நடன அமைப்பாளராக இருப்பவர் ஜானி மாஸ்டர். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். ஏராளமான தமிழ் படங்கள், தெலுங்கு படங்களில் பணியாற்றியிருக்கும் அவர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜானி மாஸ்டரின் மனைவி இந்த விவகாரத்தில் அதிரடியாக சில கருத்துக்களை தற்போது தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட திரைத்துறையில் ஃபேமஸான நடன அமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜானி மாஸ்டர். எந்தப் படமாக இருந்தாலும் கூப்பிடுங்கள் ஜானி மாஸ்டரை என்ற நிலையில் இருக்கிறார் அவர். தமிழில் வாரிசு, பீஸ்ட், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கும் அவர்; மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு கடந்த வருடம் தேசிய விருதையும் பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: அவரது நடன அமைப்புகள் பல பாடல்களில் இருந்தாலும் விமர்சனங்களையும் அதிக அளவு சந்தித்திருக்கிறார் அவர். முக்கியமாக பீஸ்ட், வாரிசு படங்களின் பாடல்களுக்கு அவர் அமைத்த நடன அசைவுகள் பெரும் ட்ரோலுக்கு உள்ளாகின. மேலும் விஜய் என்ற அசால்ட் டான்ஸரையே இப்படி வேஸ்ட் ஆக்கிவிட்டாரே ஜானி என்று பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இருந்தாலும் ஜானியின் நடனத்துக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.
பாலியல் புகார்: சூழல் இப்படி இருக்க ஜானி மாஸ்டர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது, ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார். புகார் அளித்த பெண் ஜானியிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்தவர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். ஆனால் அவர் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜானியின் மனைவி இவ்விவகாரம் குறித்து அதிரடியாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
ஜானியின் மனைவி கருத்து: அவர் இதுகுறித்து பேசுகையில், "ஜானி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் சிறுமியாக இருந்தபோது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடினார். அப்போது சினிமா துறையால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டார். பிறகு ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குநராக வேலை பார்த்துவந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் திரைப்பட அசோசேஷியனில் உறுப்பினராக சேர்வதற்குகூட பணம் கட்ட முடியாமல் இருந்தார்.
ஜானி உதவினார்: அப்போது ஜானிதான் அந்தப் பெண்ணுக்கு பண உதவி செய்தார். தான் சிறந்த நடன அமைப்பாளராக வர வேண்டும் அல்லது ஹீரோயினாக வேண்டும் என்று அப்பெண் ஆசைப்பட்டார். இதனால் ஜானி தான் பணியாற்றும் படங்களில் அந்தப் பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கினார். இப்போது அவர் மீதே அந்தப் பெண் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். மைனராக அந்தப் பெண் இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரம் இருக்கிறதா?
விலகுவதற்கு தயார்: அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதை நேரில் யாராவது பார்த்திருக்கிறார்களா? அப்போதே ஏன் அந்தப் பெண் வெளியே சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு உள்ளானால் அப்பெண் ஏன் ஜானியிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி ஜானி மாஸ்டரிடம் பணியாற்றுவது அதிர்ஷ்டம் என்று ஏன் கூறினார். பாலியல் வன்கொடுமையை ஜானி செய்தது நிரூபிக்கப்பட்டால் நான் எனது கணவரை விட்டு விலகவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











