Jackie Chan Net Worth: 70 வயது உலக சூப்பர் ஸ்டார்.. ஜாக்கி சான் சொத்து இத்தனை ஆயிரம் கோடியா?
ஹாங்காங்: சாதாரண குடும்பத்தில் பிறந்து ஸ்டன்ட் மேனாக புரூஸ் லீ படங்களில் நடித்து வந்த ஜாக்கி சான் சினிமாவில் தனக்குத் தெரிந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை காமெடியான நடிப்புடன் கலந்து நடித்து பறந்து பறந்து சண்டைப் போட்டு ரிஸ்க்கான ஸ்டன்ட்டுகளில் டூப் போடாமல் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர்.
சமீபத்தில் வயதான தோற்றத்தில் வெளியான ஜாக்கி சான் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்போது தான் ஜாக்கி சானின் வயது என்ன என்றே ஆராயத் தொடங்கினர். ஏப்ரல் 7ம் தேதியான இன்று நடிகர் ஜாக்கி சான் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

உலகம் முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள், ஜாக்கி சான் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வறுமையில் வாடி வந்த ஜாக்கி சான் சினிமாவில் சாதிக்க ஆரம்பித்த நிலையில், அவர் இதுவரை பல ஆயிரம் கோடிகளை சேர்த்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக்கி சானை பற்றியும் அவரது சொத்து மதிப்பு குறித்தும் விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
70வது பிறந்தநாள்: அகில உலக சூப்பர் ஸ்டார் என ஒரு நடிகரை சொல்ல வேண்டும் என்றால் அது நம்ம ஜாக்கி சான் ஆகத்தான் இருக்க முடியும். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட் வரை தனது படங்களை கொண்டு சென்று அங்கேயும் வசூலை ஈட்டி ராஜாவாக கெத்துக் காட்டியவர் ஜாக்கி சான். அவருடைய உண்மையான பெயர் சான் காங் சாங் என்பதுதான். சினிமாவில் அறிமுகமான நிலையில் ஜாக்கி சான் அவரது பெயர் மாறியது. 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பார்க் எனும் இடத்தில் பிறந்தவர்தான் ஜாக்கிசான்.

இந்திய சினிமாவும் ஜாக்கி சானும்: விஜய் டிவியில் அதிரடி திருவிழா மூலமாக ரசிகர்கள் பலருக்கும் பரிட்சயமானவர் ஜாக்கி சான் அவர் நடித்த படங்கள் எல்லாமே தமிழில் டப் செய்யப்பட்டு வாராவாரம் தொலைக்காட்சியில் வெளியாகும். ஜாக்கிசான் சாகசங்கள் என் கார்ட்டூன் மூலம் குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவாகவே ஜாக்கி சான் மாறினார். 2005 ஆம் ஆண்டு வெளியான 'தி மித்' திரைப்படம் இந்தியாவின் சில இடங்களில் படமாக்கப்பட்டது. மேலும், பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் அந்தப் படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்திருப்பார்.
கமல்ஹாசனும் கங்குவா ஹீரோயினும்: தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசன் ஜாக்கிசானை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். குங்ஃபூ யோகா எனும் படத்தில் திஷா பதானி ஜாக்கி சானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். சோனு சூட் அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். மேலும், அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்த அமைரா தஸ்தூரும் அந்தப் படத்தில் நடித்திருப்பார். இப்படி ஜாக்கிசானுடன் இந்திய சினிமாவின் கனெக்சன் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கி சான் படங்கள்: 1962 ஆம் ஆண்டு வெளியான பிக் அண்ட் லிட்டில் வாங்கிட்டேன் பார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜாக்கி சான். தொடர்ந்து பல படங்களில் அடையாளம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் புரூஸ்லீயின் ஃபிஸ்ட் ஆப் ஃபியூரி, என்டர் தி டிராகன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான டிரங்கன் மாஸ்டர் திரைப்படம் ஜாக்கிசானுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சண்டைப்பயிற்சி இயக்குநராக இருந்து வந்த ஜாக்கிசான் இயக்குநராகவும் மாறி ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். ப்ராஜெக்ட் ஏ, வீல்ஸ் ஆன் மீல்ஸ், போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆப் காட், சிட்டி ஹன்டர், உ ஆம் ஐ, ரஷ் ஹவர், தி மெடலியன், தி மித், தி கராத்தே கிட், CZ 12 உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.
சொத்து மதிப்பு: ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை இயக்கி நடித்த ஜாக்கி சான் இதுவரை மொத்தமாக 400 மில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு சுமார் 3300 கோடி என மலைக்க வைக்கின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் ஹாலிவுட் வேண்டாம் என நினைத்த ஜாக்கி சான் சீனாவிலேயே படங்களை தயாரித்து ரிலீஸ் செய்து வருகிறார். 70-வது வயதிலும் ரஷ் ஹவர் 4 படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











