'காப்பாற்றிய தெய்வ சக்தி..' படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. நீரில் மூழ்கிய நடிகர் ஜாக்கிச் சான்!
பெய்ஜிங் : படப்பிடிப்பில் நடந்த பயங்கர விபத்தில் இருந்து, தெய்வீக சக்தி தன்னைக் காப்பாற்றியதாக நடிகர் ஜாக்கிச்சான் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் படங்களில் காமெடி மற்றும் அதிரடி சாகசக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதால், இவர் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

ஸ்பை த்ரில்லர்
இவர் இப்போது, வான்கார்ட் என்ற சீனப் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பை த்ரில்லர் படமான இதை, ஸ்டேன்லி டோங் (Stanley Tong) இயக்கி வருகிறார். சீன நடிகை மியா முகி (Miya Muqi), யங் யங், ஐ லுன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

பாறையில் மோதியது
இப்போது இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆற்றுக்குள் ஜாக்கி சானும் மியாவும், ஜெட் ஸ்கீ எனும் தண்ணீர் ஸ்கூட்டரில் வேகமாகப் பயணிப்பது போன்றக் காட்சியை சில நாட்களுக்கு முன் படமாக்கினர். அப்போது ஒரு வளைவில் அந்த ஸ்கூட்டரை அவர் திருப்ப வேண்டும். திருப்பும்போது எதிர்பாராத விதமாகப் பாறையில் மோதியது.

ஜாக்கிசானை காணவில்லை
மோதிய வேகத்தில் அப்படியே ஆற்றுக்குள் ஜெட் ஸ்கீ கவிழ்ந்தது. இதில் நடிகர் ஜாக்கிசானும் ஹீரோயின் மியாவும் நீரில் மூழ்கினர். உடனே பாதுகாவலர்கள் அலறி அடித்து அவர்களைக் காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்தனர். சிறிது நேரத்தில், நடிகை மியா தண்ணீருக்குள் இருந்து எழுந்தார். ஆனால் ஜாக்கி சானை காணவில்லை.

இயக்குனர் கண்ணீர்
அவர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். 45 விநாடிகள் அவரைக் காணாததால் படக்குழு பயந்துவிட்டது. இயக்குனர் ஸ்டேன்லி டோங் கண்ணீர் விட்டு கதறத் தொடங்கினார். அவரை தண்ணீருக்குள் பல இடங்களில் தேடிய பாதுகாவலர்கள், பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.
Recommended Video

தெய்வீக சக்தி
விபத்தை அடுத்து ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பின் ஜாக்கிசான் மீண்டும் அதே காட்சியில் நடித்தார். இந்த விபத்து பற்றி ஜாக்கி சான் கூறும்போது, ' கிட்டத்தட்ட நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டேன். ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கினேன். என்ன நடந்தது என்று நினைவில்லை .ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











